கடந்த 5 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் தொடர்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது பெங்களூரு நகரம்.
இந்நிலையில், கர்நாடகாவின் பிற பகுதிகளில் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சார்ஜாப்புரா சாலையில் 5 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.
ரெயின்போ லே-அவுட் அருகே உள்ள ஒரு கிரானைட் கற்கள் விற்பனை கடையில் வெள்ளம் புகுந்ததால் அந்த கடை முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதுபோல அங்குள்ள பேருந்து நிறுத்தமும் தண்ணீரில் மிதக்கிறது.
பிரபலமான சர்ஜாப்புரா சாலையில் உள்ள விப்ரோ தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தை தண்ணீர் சூழ்ந்ததால் அந்நிறுவனத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
இதனால் அந்த நிறுவனத்தின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்தம் இடத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் 50 க்கும் மேற்பட்ட கார்கள் தண்ணீரில் மூழ்கின.
இதுபோல சர்ஜாப்புரா சாலையில் உள்ள கன்ட்ரிசைட் என்ற அடுக்குமாடி குடியிருப்பை சுற்றியும் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.
பெங்களூரு இந்திராநகர் பகுதியில் பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள 100 அடி சாலையில் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளம் அதிகமாகி உள்ளதால் மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 5 ஆயிரம் பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழையால் 162 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
பெல்லந்தூர் மற்றும் வர்தூர் ஆகிய இரண்டு ஏரிகள் நிரம்பி உள்ளதால் ஏரியின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பெங்களூருவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்கள் குறித்து முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை 15 மாவட்ட கலெக்டர்களுடன் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் இருந்தபடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
மழை வெள்ளம் காரணமாக புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய தொழில்நுட்ப பூங்காக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் இன்று (செப்டம்பர் 7) மாலை 5 மணிக்கு விதான்சவுதாவில் தொழில் நுட்ப நிறுவனர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று உத்தர கர்நாடகா மற்றும் தக்சின் கர்நாடகா மாவட்டங்களுக்கு தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட்டும், பெங்களூரு நகருக்கு மஞ்சள் அலர்ட்டும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பெங்களூர் வெள்ளத்துக்கு என்ன காரணம்?: விளக்கும் வானிலை அதிகாரி!