Bengaluru drinking water shortage

பெங்களூரு குடிநீர் தட்டுப்பாடு : கார் கழுவ தடை… மீறினால் அபராதம்!

இந்தியா

பெங்களூருவில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக வாகனங்களை கழுவ, தோட்டம் அமைக்க குடிநீரை பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூரு கடந்த ஒரு வாரமாக கடும் குடிநீர் தட்டுபாட்டால் சிக்கி தவிக்கிறது. அங்குள்ள 3,000க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுவதால் மக்கள் லாரி தண்ணீரை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நாள்தோறும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்லும் பெரியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சொந்த ஊருக்கு செல்லும் மனநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பல்வேறு தனியார் பள்ளிகள், பயிற்சி மையங்கள் தற்காலிகமாக மூடிவிட்டு, ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளன.

Bengaluru drinking water shortage

உத்தரவை மீறினால் அபராதம்!

கோடைக்காலம் தொடங்குவதற்குள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை மக்கள் சந்தித்து வரும் நிலையில், பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

அதன்படி, பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல், கட்டுமானம் மற்றும் நீர் நீரூற்றுகள் போன்ற பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மக்கள் குடிநீரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், தொடர்ந்து மீறினால் அபராதத் தொகையுடன் ஒரு நாளைக்கு ரூ.500 சேர்க்கப்படும்” என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யாரும் விதிமீறல்களில் ஈடுபடுவதை கண்டால், பொதுமக்கள் 1916 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Bengaluru drinking water shortage

தண்ணீர் டேங்கர் விலை நிர்ணயம்!

இதற்கிடையே தண்ணீர் தட்டுப்பாடு சூழ்நிலையை பயன்படுத்தி, தனியார் தண்ணீர் டேங்கர்களின் விலை அதிரடியாக உயர்ந்தது. முன்பு 6,000 லிட்டர் தண்ணீர் டேங்கருக்கு ரூ.450 முதல் ரூ.600 வரை வசூலிக்கப்பட்டது. ஆனால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நகரம் முழுவதும் 6,000 லிட்டர் டேங்கர் ஒன்றுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை விலை உயர்ந்தது.

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனியார் தண்ணீர் டேங்கர்களின் விலையை நிர்ணயித்து கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, ‘ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள தண்ணீர் டேங்கர்களுக்கான கட்டணம் 6,000 லிட்டர் டேங்கருக்கு ரூ.600 ஆகவும், 8,000 லிட்டர் டேங்கருக்கு ரூ.700 ஆகவும், 12,000 லிட்டர் டேங்கருக்கு ரூ.1,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால் ஆனால் 10 கிலோமீட்டருக்குள், அதே டேங்கர் கொள்ளளவிற்கு முறையே ரூ.750, ரூ.850 மற்றும் ரூ.1200 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையான கட்டணங்கள், ஜிஎஸ்டியுடன் இணைந்து, பெங்களூரு நகருக்கு தண்ணீர் வழங்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட தனியார் டேங்கர்களுக்கு பொருந்தும்.

வறட்சியின் இந்த சவாலான காலகட்டத்தில் நியாயமான மற்றும் மலிவு விலையில் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வேளச்சேரி- தாம்பரம்: மெட்ரோ ரயில் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா?: எடப்பாடி பழனிசாமி பதில்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *