தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி, தன்னுடைய சொந்த மகனைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. Girl Killed her 4 year son in goa
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த மைண்ட்புல் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருப்பவர் சுசனா சேத் (39).
இவர் கடந்த ஜனவரி 7-ம் தேதி வடக்கு கோவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தன்னுடைய 4 வயது மகனுடன் அறை எடுத்துத் தங்கியுள்ளார்.
நேற்று (ஜனவரி 8) அதிகாலை அறையைக் காலி செய்துவிட்டு காரில் பெங்களூருக்குத் திரும்பி இருக்கிறார். அவர் காலி செய்த பின்னர் அறையைச் சுத்தம் செய்ய சென்ற ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் அங்குள்ள விரிப்புகளில் ரத்தக்கறைகள் படிந்திருந்தன. இதனால் அதிர்ச்சியான ஊழியர் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் ஹோட்டலுக்குச் சென்ற போலீசார், அங்குள்ள சிசிடிவியை போட்டுப் பார்த்துள்ளனர்.
அதில் சுசனா தனியாக அறையைக் காலி செய்ததும், பெரிய சூட்கேஸ் ஒன்றை யார் உதவியும் இன்றி போராடி காருக்கு எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.
மேலும் பெங்களூருக்கு விமானக்கட்டணம் குறைவு என ஊழியர்கள் தெரிவித்தும் கூட, டாக்ஸியில் செல்வதை சுசனா விரும்பிய விவரம் தெரிந்ததும் போலீசாரின் சந்தேகம் வலுத்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், சுசனாவுக்கு கால் செய்து உங்கள் மகன் எங்கே? என கேட்டுள்ளனர். அதற்கு அவர் தன்னுடைய நண்பர் வீட்டில் இருப்பதாகக் கூறி முகவரி ஒன்றை சுசனா அளித்துள்ளார்.
அந்த முகவரியை போலீசார் விசாரித்தபோது அது போலி முகவரி எனத் தெரிந்தது. இதையடுத்து டாக்ஸி டிரைவருக்கு போலீசார் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது கார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்று கொண்டிருப்பதும், காரில் சுசனாவின் மகன் இல்லை என்பதும் உறுதியானது.
இதைத்தொடர்ந்து கார் டிரைவருக்கு போன் செய்து அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு செல்லுமாறு போலீசார் கூறினர். அதன்படி டிரைவர், ஜமங்கலா போலீஸ் நிலையத்திற்கு காரை ஓட்டிச் சென்றார்.
கோவா போலீசார் தகவல் தெரிவித்து இருந்ததால், ஜமங்கலா போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது பெரிய பையில் சுசனாவின் மகன் கொலை செய்யப்பட்டு அடைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சுசனாவைக் கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது தன்னுடைய முன்னாள் கணவர் மகனை வந்து பார்ப்பதை விரும்பாததால், தான் இதை செய்ததாக சுசனா வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
தற்போது சுசனா மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரைக் காவலில் எடுத்து மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னையில் 55 சதவிகிதம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை: கமலக்கண்ணன்