கொல்கத்தா டாக்டர் கொலை… இந்த தண்டனை போதாது… மம்தா ஆக்‌ஷன்!

Published On:

| By Selvam

கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு கொல்கத்தா சியால்டா நீதிமன்றம் நேற்று (ஜனவரி 20) ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அம்மாநில அரசு சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 21) மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவ பயிற்சி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் போலீஸ் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராயை போலீசார் கைது செய்தனர்.

வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. மாணவி பாலியல் வழக்கில் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி தீர்ப்பளித்த கொல்கத்தா சியால்டா நீதிமன்ற நீதிபதி அனிபர் தாஸ், சஞ்சய் ராய் குற்றவாளி என அறிவித்தார்.

நேற்று இந்த வழக்கில் தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி அனிபர் தாஸ், சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கினார்.

இந்த தீர்ப்பு குறித்து நேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ” மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில், நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பைக் கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

இந்த வழக்கில், குற்றவாளிக்கு ஏன் மரண தண்டனை வழங்கப்படவில்லை? இது மரண தண்டனைக்கு தகுதியான ஒரு கொடூரமான குற்றம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தி நாங்கள் உயர்நீதிமன்றத்தை நாடுவோம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், மேற்குவங்க மாநில அரசு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கொல்கத்தா சியால்டா நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கக் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel