அலிகார் முஸ்லிம் பல்கலையில் பீப் பிரியாணி… வெடித்த சர்ச்சை!

Published On:

| By Kumaresan M

அலிகார் முஸ்லிம் பல்கலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியமும் மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், திடீரென இனிமேல் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் பீப் பிரியாணி வழங்கப்படும் என்று நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்த நோட்டீசில் சொல்லப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அப்படி ஒரு முடிவெடுத்தால் அதை ஏன் பொதுவெளியில் நோட்டீசாக ஒட்ட வேண்டுமென்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். பாரதிய ஜனதா கட்சியும் பல்கலையில் பீப் பிரியாணி வழங்க எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அலிகார் முஸ்லிம் பல்கலை விளக்கமளித்துள்ளது. டைப்பிங் செய்யும் போது தவறுதலாக பீப் பிரியாணி என்று குறிப்பிடப்பட்டு விட்டதாகவும், உடனடியாக அந்த நோட்டீசை அகற்றி விட்டதாகவும் கூறியுள்ளது.

மேலும், அந்த நோட்டீசில் அதிகாரப்பூர்வ கையொப்பமும் இல்லை. இதனால், அந்த நோட்டீஸை வேண்டுமென்றே சர்ச்சையை உருவாக்கும் வகையில் அதிகாரப்பூர்வமற்றவர்கள் ஒட்டியிருக்கலாம். நோட்டீஸ் ஒட்டும் பணிக்கு பொறுப்பான இரு சீனியர் மாணவர்களிடத்தில் விளக்கம் கேட்டிருப்பதாகவும் பல்கலை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகியும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவருமான நிஷித் சர்மா, ‘ சிக்கன் பிரியாணிக்கு பதிலாக மாட்டிறைச்சி பிரியாணி வழங்கப்படும் என்று சர் ஷா சுலைமான் ஹாலில் நோட்டீஸ் பகிரங்கமாக ஒட்டப்பட்டிருந்தது. அலிகார் பல்கலைக்கழகம் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்து கொள்கிறது. இந்த விவகாரத்தில் பல்கலை நிர்வாகத்தின் பங்கு நிச்சயமாக மோசமானது. மாணவர்களின் தவறான நடத்தையை மூடி மறைக்கிறது பல்கலைக்கழகம்’ என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share