டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இன்று (பிப்ரவரி 16) மூன்றாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் வருமான வரியைத் தவிர்ப்பதற்காக டிபிஆர் எனும் டிரான்ஸ்பர் பைரைசிங் விதிகளை பிபிசி மீறியதாக கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி டெல்லி மற்றும் மும்பையில் உள்ள அதன் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையானது இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக 2012-ஆம் ஆண்டு முதல் பிபிசியின் கணக்கு வழக்கு ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
முழுவதுமாக ஆவணங்களை சரிபார்த்த பின்னரே இந்த சோதனை நிறைவடையும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
வருமான வரித்துறையின் இந்த சோதனைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமூல், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, “டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் சோதனை குறித்து எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.
ஆனால் தற்போது அது குறித்து கருத்து கூறும் நிலையில் நாங்கள் இல்லை. கருத்து சுதந்திரத்திற்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவளிக்கும்.” என்று தெரிவித்திருந்தார்.
கடந்த மாதம் பிபிசி நிறுவனமானது “India: The Modi Questions” என்ற ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது.
இந்த ஆவணப்படத்தில் குஜராத்தில் 2002-ஆம் ஆண்டில் நடைபெற்ற கலவரத்திற்கு மோடி தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
பாகிஸ்தானில் உள்ள தூதரகத்தை மூடும் சீனா: காரணம் என்ன?
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஹால் டிக்கெட் வெளியீடு