பிபிசி ஊடகம் பிரதமர் நரேந்திர மோடி குறித்து வெளியிட்ட ஆவணப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்து வரும் நிலையில், இன்று (பிப்ரவரி 14) டெல்லி மற்றும் மும்பையில் இயங்கி வரும் பிபிசி ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் செய்தி ஊடகமான பிபிசி கடந்த ஜனவரி 19-ஆம் தேதி “India: The Modi Questions” என்ற ஆவணப்படத்தை வெளியிட்டது.
இந்த ஆவணப்படத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்றும் இது முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இங்கிலாந்து அரசின் காலனியத்துவ மனோநிலையை ஆவணப்படம் காட்சிப்படுத்துவதாக கூறி மத்திய ஒளிபரப்பு துறை அமைச்சகம் இந்த ஆவணப்படத்தை தடை செய்தது.
ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியுப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து மோடி ஆவணப்படத்தின் லிங்குகள் அகற்றப்பட்டது.

இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்வினை ஆற்றின.
இந்திய தேசிய ஜனநாயக வாலிபர் சங்க மாணவர்கள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மோடி ஆவணப்படத்தை கல்லூரிகளில் தடையை மீறி வெளியிட்டனர்.
குறிப்பாக ஜவர்ஹால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஹைதராபாத், கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மோடி ஆவணப்படத்தை திரையிட்டனர்.
மோடி ஆவணப்படத்தின் முதல் பாகம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஜனவரி 24-ஆம் தேதி மோடி ஆவணப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது.
இந்த ஆவணப்படத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்துவதற்காக பாஜக அரசு எடுத்த முயற்சிகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆவணப்படத்தின் இறுதியில் நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியா மாற்றமடைந்துள்ளது. மோடி மிகவும் பிரபலமானவராகவும், இந்தியாவை பிளவுபடுத்துவராகவும் உள்ளார் என்ற குரல் பதிவுடன் நிறைவடைந்திருந்தது.
பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி மூத்த பத்திரிகையாளர் என்.ராம், வழக்கறிஞர் பிராசாந்த் பூஷண், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களுக்கு மூன்று வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள அம்பேத்கர் திடலில் மோடி ஆவணப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டனர்.

இந்தநிலையில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.
காலை 11.30 மணியில் இருந்து டெல்லி கஸ்தூரி பாய் காந்தி மார்க் பகுதியில் அமைந்திருக்கும் பிபிசி அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
பிபிசி ஊடகம் தொடர்பான சர்வதேச வரிவிதிப்பு மற்றும் முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகள் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அங்கு பணியாற்றும் ஊழியர்களுடைய செல்போன்கள் ஐடி ஊழியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்ற ஊழியர்கள் யாரும் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அதானி குழுமத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டு குழு (ஜேபிசி) விசாரணைக்கு நாங்கள் கேட்கிறோம், ஆனால் பாஜக அரசு பிபிசியை வேட்டையாடுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் சோதனை அரசியல் அரங்கில் மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
செல்வம்
போலி பத்திரப்பதிவு: வழக்கு நிலுவையில் இருந்தாலும் புகார் அளிக்கலாம்!
மின் வாகன கொள்கை சலுகைகள் 2025 வரை நீட்டிப்பு: முதலமைச்சர்