பிபிசி வெளியிட்ட “India: The Modi Question” என்ற ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜனவரி 19-ஆம் தேதி வெளியானது. இந்த ஆவணப்படத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்றும் இது முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இங்கிலாந்து அரசாங்கத்தின் காலனியத்துவ மனோநிலையை இந்த ஆவணப்படம் பிரதிபலிப்பதாக கூறி ஆவணப்படத்தின் முதல் பாகத்தை மத்திய அரசு இந்தியாவில் தடை செய்தது.

இதனை தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் யூடியுப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து ஆவணப்படத்தின் லிங்குகள் மற்றும் காட்சிகளை நீக்கியது. மேலும், ஆவணப்படம் தொடர்பான லிங்குகள் மற்றும் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டால் அதனை உடனடியாக நீக்க வேண்டும் என்று பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைதளங்களுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
டெல்லி ஜவர்ஹால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மோடி பிபிசி ஆவணப்படத்தை பல்கலைக்கழக வளாகத்தில் திரையிட முயன்றபோது,மின்சாரம் துண்டிக்கப்பட்டு கல் வீச்சு தாக்குதல் நடைபெற்றது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பதட்டமான சூழல் உருவானது.
கேரளாவில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் கேரள மாணவர் காங்கிரசை சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் மோடி ஆவணப்படத்தை திரையிடுகின்றனர்.
மோடி ஆவணப்படத்தின் முதல் பாகம் இந்தியாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இரண்டாம் பாகம் ஜனவரி 24-ஆம் தேதி மாலை இங்கிலாந்தில் ஒளிபரப்பப்பட்டது. இரண்டாம் பாகத்தில் 2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பின்பு இந்திய முஸ்லிம்களுடனான மோடி அரசாங்கத்தின் உறவு மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட வகுப்புவாத பிரச்சனைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் பாகம் ஆவணப்படத்தில், முதல் பாகத்தில் காட்டப்பட்ட அறிமுகக் காட்சிகளுடன் கிராபிக்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2017-ஆம் ஆண்டு ஜார்கண்டில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களுடன் இந்த ஆவணப்படம் துவங்குகிறது.

60 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படத்தில், இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு பாஜக மீண்டும் வெற்றி பெற்றது, ஆகஸ்ட் 5, 2019-ஆம் ஆண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய பாஜக அரசு எடுக்க முயன்றபோது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற போராட்டம்,
2020-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் போராட்டக்காரர்களை தேசிய கீதம் பாடும் படி கட்டாயப்படுத்தி பாதுகாப்பு படையினர் அடிக்கும் வீடியோ காட்சிகள், போராட்டக்காரர்கள் மற்றும் உயிரிழந்த போராட்டக்காரர்களின் உறவினர்களிடம் நடத்திய நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் அகமதாபாத்தில் பங்கேற்ற பேரணி தொடர்பான காட்சிகளும் உள்ளது.

நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியா மாற்றமடைந்துள்ளது. அவர் மிகவும் பிரபலமானவராகவும் இந்தியாவை பிளவுபடுத்தக்கூடியவராகவும் இருக்கிறார் என்ற குரல் பதிவுடன் ஆவணப்படம் முடிவடைகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் டோலர் போபட், பிபிசியின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இந்த ஆவணப்படம் ஒருதலைபட்சமாக உள்ளது.
பிபிசி ஆவணப்படத்தை ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும். முஸ்லிம்கள் துன்புறுத்தப்படும் சகிப்புத்தன்மையற்ற நாடாக இந்தியாவை சித்தரிக்க முயற்சிப்பதன் மூலம் இங்கிலாந்தில் உள்ள இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பதட்டமான சூழல் உருவாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வம்
5 பேருக்கு அண்ணா பதக்கம், 3 காவல் நிலையங்களுக்கு விருது!
சாதனைகளை படைத்த பதான்: முதல் நாள் வசூல் எவ்வளவு?