bbc delhi and mumbai

பிபிசி அலுவலகங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு!

இந்தியா

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 3 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது.

இந்தியாவில் வருமான வரியைத் தவிர்ப்பதற்காக டிபிஆர் எனும் டிரான்ஸ்பர் பைரைசிங் விதிகளை பிபிசி மீறியதாகக் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி டெல்லி மற்றும் மும்பையில் உள்ள அதன் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை நடைபெறும் அலுவலகங்களில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வருமான வரித்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.

வருமான வரித்துறையினர் 2012 ஆம் ஆண்டு முதல் பிபிசியின் கணக்கு வழக்கு ஆவணங்களை சரிபார்த்து வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆவணங்களை முழுவதுமாக சரிபார்த்த பிறகு வருமான வரித்துறையின் சோதனை நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பிபிசி நிறுவனமும் வருமான வரித்துறைக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கித் தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்ற சோதனை நேற்று (பிப்ரவரி 16) இரவு 11 மணியளவில் நிறைவடைந்தது.

பிபிசி விளக்கம்

இது குறித்து பிபிசி நிறுவனம், “டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எமது அலுவலகங்களில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டுச் சென்று விட்டார்கள். அதிகாரிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த விவகாரம் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்.

bbc delhi and mumbai office income tax raid over

எங்களது ஊழியர்களுக்கு நாங்கள் ஆதரவளித்து வருகிறோம். அவர்களில் சிலர் நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள் அல்லது இரவு முழுவதும் அலுவலகத்திலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களின் நலனுக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.

எங்களது செய்தி வழங்கும் பணி சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளது. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் உள்ள எங்களது நேயர்களுக்கு தொடர்ந்து செய்திகளை வழங்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பிபிசி என்பது நம்பிக்கைக்குரிய, சுதந்திரமான ஊடக நிறுவனம். அச்சம் மற்றும் சார்புத்தன்மை இன்றி தொடர்ந்து பணியாற்றும் எங்களது ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்களுடன் என்றும் நாங்கள் துணை நிற்போம்” என்று தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை விளக்கம்

பிபிசி அலுவலகங்களில் நடைபெற்ற சோதனை குறித்து வருமான வரித்துறை, “பிபிசி அலுவலகங்களில் ஆய்வு நடைமுறைகளை மேற்கொண்டபோது, அதனுடன் தொடர்புடைய நிதிப்பிரிவு, நிகழ்ச்சி மேம்பாட்டுப்பிரிவுகள் உள்ளிட்டவற்றின் ஊழியர்களில் எவருடைய பணி முக்கியமானதோ அவர்களின் தகவல்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. ஆய்வு நடைமுறைகளின்போது எவ்வித டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை.

எந்தெந்த சாதனங்களின் முக்கிய தரவுகள் நகல் எடுக்கப்பட வேண்டுமோ அவை மட்டுமே பிரதி எடுக்கப்பட்டு அசல் சாதனம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. ஆசிரியர் குழுவில் இடம்பெற்றவர்களில் எவருடைய பணி முக்கியமானதாக இல்லையோ அவர்கள் தங்களது பணிகளைத் தொடர அனுமதிக்கப்பட்டனர். ஊழியர்கள் இரவு வீட்டுக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டு அலுவலகங்களில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றதால் அதிகாரிகள் நடைமுறைகளை முடித்துக் கொண்டு பிபிசி அலுவலகங்களை விட்டு வெளியேறி விட்டனர்.

பிபிசி ஆவணப்படம்

கடந்த மாதம் பிபிசி “india: The Modi Questions” என்ற ஆவணப்படத்தை வெளியிட்டது. அதில் 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு மோடி தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

bbc delhi and mumbai office income tax raid over

இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும் இந்தியாவில் பிபிசி ஊடகத்திற்கும் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் தான் வருமான வரித்துறை அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டது நாடு முழுவதும் பல எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் பெற்றது. வருமான வரித்துறை சோதனைக்கு ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

புறக்கணிக்கும் அண்ணாமலை… புலம்பும் பன்னீர் தரப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *