ஆந்திராவில் நடைபெற்ற தடியால் அடித்துக்கொண்டு ரத்தம் சிந்தும் விநோதத் திருவிழாவில் 50 பேர் காயமடைந்தனர். ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் தேவரகட்டு மலை குன்று மீது பழமையான மாலமல்லேஷ்வர சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா நிறைவு நாளன்று பக்தர்கள் ஒருவரை ஒருவர் தடியால் அடித்துக்கொண்டு ரத்தம் சிந்தும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு தசரா நிறைவு நாளான நேற்றும்(அக்டோபர் 5) வழக்கம் போல் திருவிழா நடத்தப்பட்டது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தேவரகட்டு சுற்று வட்டாரத்தில் உள்ள 14 கிராமங்களை சேர்ந்த பல ஆயிரம் பேர் வந்திருந்தனர்.
திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் இரும்பு கூம்புகள் பொருத்தப்பட்ட தடிகளை பயன்படுத்தி ஒருவரை மற்றவர் தாக்குவது வழக்கம்.
அப்போது ஏற்படும் காயத்தில் இருந்து சொட்டும் ரத்தத்தை புராண காலத்தில் அந்த பகுதியில் இறைவன் வதம் செய்ததாக கூறப்படும் ராட்சசனுக்கு சமர்ப்பிப்பார்கள்.
வழக்கம்போல் நேற்று மாலை துவங்கி இன்று (அக்டோபர் 6)அதிகாலை வரை ரத்தம் சிந்தும் திருவிழா நடைபெற்றது.

அப்போது பக்தர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அலூரு மற்றும் ஆதோனி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த திருவிழாவில் பங்கேற்ற ரவிந்திரநாத் ரெட்டி என்ற 14 வயது சிறுவன் உயிரிழந்தான்.
சம்பிரதாயம் என்ற பெயரில் அங்கு வரும் பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் பலமாக தாக்கி கொள்ளும் உற்சவத்தை நடத்த போலீசார் அனுமதி தருவதில்லை.
என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் அந்தப் பகுதியில் இந்த ரத்தம் சிந்தும் திருவிழா நடப்பது வழக்கம். இதில் ஒருவரை ஒருவர் பழி தீர்த்து கொள்ளும் நிகழ்வாகவும் சிலர் பயன்படுத்தி கொள்கின்றனர்.
கலை.ரா
கொடூர விபத்து: ஊட்டிக்கு சுற்றுலா வந்த மாணவர்கள் உயிரிழப்பு!
இந்தியாவின் 4 இருமல் மருந்துகளுக்கு தடை ஏன்? உலக சுகாதார நிறுவனம்!