வங்கதேச துறைமுகங்களைப் பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதி!

இந்தியா

வங்கதேசத்தின் சட்டோகிராம் மற்றும் மோங்லா ஆகிய இரண்டு துறைமுகங்களை இந்தியா பயன்படுத்த அந்நாடு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக வங்கதேச தேசிய வருவாய் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கடந்த 2018ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், வங்கதேசத்தின் சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களை இந்தியா நிரந்தரமாகப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

இறக்குமதிக்காகவும், ஏற்றுமதிக்காகவும் இந்த துறைமுகங்களை இந்தியா பயன்படுத்த முடியும். இதற்காக, ஏற்படுத்தப்பட்ட எஸ்ஓபி எனப்படும் நிலையான இயக்க நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் மற்றும் நீர்வழி தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

கடந்த 1965இல் பாகிஸ்தானுடன் நடந்த போர் காரணமாக முடக்கப்பட்ட போக்குவரத்துப் பாதைகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே போக்குவரத்து மேம்படுத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்குப் பொருட்களைக் கொண்டு செல்லும் நோக்கில் வங்கதேசத்தின் சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களை இந்தியா பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான எஸ்ஓபி முடிவு செய்யப்பட்டு கடந்த 2018ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. எனினும், சுங்க நடைமுறை மற்றும் தளவாடங்களை வைப்பதற்கான இட வசதி உள்ளிட்ட காரணங்களால் ஒப்பந்தத்தை அமல்படுத்துவதை வங்கதேசம் தாமதப்படுத்தி வந்தது.

அதன்பிறகு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாகவும், இது தள்ளிப்போனது. அதேநேரத்தில், இரு நாடுகளுக்கு இடையே இணைப்புகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை கொரோனா பாதிப்பு உருவாக்கியதாகவும், அதன் காரணமாகவே தாமதமாகி வந்த இந்த ஒப்பந்தம், தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்மூலம், வட கிழக்கில் உள்ள திரிபுரா, மிசோரம், மேகாலயா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பொருட்களைக் கொண்டு செல்வது எளிதாகும். போக்குவரத்துச் செலவுகள் குறையும் என்பதால் அம்மாநிலங்களில் பொருட்களின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை… தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *