கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மாடியில் எரிக்கப்படும் சடலங்கள், தெருக்களில் நடமாடும் முதலைகள் என சமூக வலைதளங்களில் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி வருகின்றன.
உத்திரபிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, வாரணாசியில் பாயும் கங்கை ஆற்றில் அபாயகட்டமான 70.72 மீட்டரை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் வருணா ஆற்றிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
வீட்டு மாடியில் எரிக்கப்படும் சடலங்கள்!
இதனால் புகழ்பெற்ற அஸ்தி படித்துறையில் இருந்து நமோ படித்துறை வரை உள்ள பகுதிகள் நீரில் மூழ்கின.
இதன்காரணமாக தகனத்திற்காக கொண்டுவரப்பட்ட சடலங்களை அங்கு எரிக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சடலங்களை தெருக்களில் உயரமான இடத்திலும், வீட்டு மொட்டை மாடிகளிலும் எரித்து வருகின்றனர்.
மேலும் இதில் இடப்பற்றாக்குறையும், தொடர்ந்து மழையும் பெய்துவருவதால், மக்கள் சடலங்களுடன் நீண்ட தூரத்திற்கு காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மிரட்டிய முதலை!
பிரயாக்ராஜ் ஆக மாறியுள்ள அலகாபாத்தில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் 84.73 மீட்டர் அபாய அளவைக் கடந்து செல்கிறது.
இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் ஆபத்தான முதலை போன்ற உயிரினங்களும் மக்கள் வசிப்பிடங்களுக்குள் அடித்துவரப்படுகிறது. இன்று காலையில் கங்கையை ஒட்டி மக்கள் வாழும் சலோரி பகுதியில் 10-12 அடி நீளமுள்ள முதலை தென்பட்டது.
இதனைக் கண்ட பொதுமக்கள் அச்சத்தில் கூரையில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக வனத்துறையினர் அங்கு வந்து நீண்டநேர போராட்டத்துக்கு பின் முதலையை பிடித்து மீண்டும் கங்கையில் விட்டனர்.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், வெள்ள நிவாரண முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிடம் கோரிக்கை விடுத்த வங்காள தேசம்!
இந்நிலையில் கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் பிற நதிகளின் வெள்ளப்பெருக்கின் துல்லியமான விவரங்களை அண்டை நாடான வங்காள தேசம் கோரியுள்ளது.
பொதுவாக இந்தியாவின் முக்கிய நதிகளான கங்கை மற்றும் பிரம்மபுத்திராவில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு வங்காள தேசத்திலும் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தும்.

கங்கை நதியானது , உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஆகிய மாநிலங்கள் வழியாக பயணித்து வங்கதேச எல்லையை ஒட்டி ஹூக்ளி, பத்மா என இரு ஆறுகளாகப் பிரிந்து,
முறையே மேற்கு வங்காள மாநிலம் மற்றும் வங்கதேசம் வழியாகச் சென்று மிகப் பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இதேபோல் ஆசியாவின் பெரிய வற்றாத ஜீவநதியான பிரம்மபுத்திரா, சீனாவில் உருவாகி, இந்தியாவின் அருணாசல பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களை கடந்து வங்காளதேசத்தில் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இந்நிலையில் தான் கங்கையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அதன் துல்லிய விவரங்களை வங்காள தேசம் கோரியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மேகவெடிப்பு – அமர்நாத் யாத்திரையில் பயங்கரம்: பக்தர்களின் நிலை?