பெங்களூருவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஊழியர்களை படகில் அலுவலகம் அழைத்து வர ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
பெங்களூருவில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் நகரமே முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியது.
இதனால் சாலைகள் அனைத்தும் ஆறு போல் காட்சியளிக்கிறது. மக்கள் வீட்டை வெளியேற முடியாமலும், குடிநீர் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் எளிதில் கிடைக்காததாலும் அவதியுற்றனர்.
இதனைத் தொடர்ந்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரம் மூலம் மக்களை மீட்டுப் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றினர்.
இது மட்டுமல்லாமல் ஐடி பணியாளர்கள் ரூ. 50 கட்டணமாகச் செலுத்தி டிராக்டர்களில் அலுவலகத்துக்குச் சென்று வந்தனர்.
17 கிமீ நீளமுள்ள பெங்களூரு வெளிவட்ட சாலையில் உள்ள நிறுவனங்களில் மட்டுமே 10 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
மைக்ரோசாப்ட், இன்டெல், கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் மோர்கன் ஸ்டான்லி போன்ற சர்வதேச நிறுவனங்களின் அலுவலகங்கள் பெங்களூரு வெளிவட்ட சாலையில் அமைந்துள்ளது.
மன்யாதா தூதரக தொழில்நுட்ப பூங்கா, செஸ்னா பிசினஸ் பார்க், மற்றும் பிரெஸ்டீஜ் டெக் பார்க் போன்ற வணிக பூங்காக்களைக் கொண்டுள்ளது. இப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால் பெங்களூரு வெளிவட்ட சாலையில் அமைந்துள்ள அமெரிக்க நிதி சேவை நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களின் குடும்பத்தினரை மீட்பதற்கும், ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வருவதற்கு ரப்பர் படகுகளை வாங்கி பயன்படுத்தி வருகிறது.
தற்போது, அமெரிக்க நிதி நிறுவனங்கள் போல் மற்ற ஐடி நிறுவனங்களும் காற்றடித்துப் பயன்படுத்தக்கூடிய ரப்பர் படகுகளை வாங்கி அவர்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வர முடிவு செய்துள்ளார்கள்.
மோனிஷா
பெங்களூர் வெள்ளத்துக்கு என்ன காரணம்?: விளக்கும் வானிலை அதிகாரி!