தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் இன்று (செப்டம்பர் 29) கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
டெல்டா பாசனத்திற்காகத் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
ஆனால் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதிலிருந்து இந்த பிரச்சனை அதிகரிக்க தொடங்கியது.
குறிப்பாக 5,000 கன அடி நீர் போதாது என்று தமிழ்நாடு அரசும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசும் மாறி மாறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இருமாநில அரசுகளின் கோரிக்கையும் நிராகரித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 26 ஆம் தேதி பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று கர்நாடகாவில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தை விட, மாநிலம் தழுவிய பந்த் வீரியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு 2 ஆயிரம் கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், கர்நாடக மாநில முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் பெங்களூருவில் இன்று இரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை விட்டுள்ளது.
ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பந்த் காரணமாக தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர்கள் கர்நாடகாவிற்கு இன்று செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோனிஷா