பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இரண்டு விரல் பரிசோதனையை நடத்தும் எவரும் தவறான நடத்தை குற்றவாளியாக கருதப்படுவார்கள்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில், பெண்களின் பாலுறுப்புக்குள் இரண்டு விரல்களை செலுத்தி கன்னித்திரை கிழியாமல் இருக்கிறதா என்று சோதனை செய்யப்படும் முறைதான் இருவிரல் பரிசோதனை என்பது.
இதற்கு தடைவிதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் சந்திரசூடு மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(அக்டோபர் 31) தீர்ப்பளித்தது.
அதில், பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு இருவிரல் சோதனை செய்யப்படுவது மேலும் காயப்படுத்தும் செயலாகும். இதுபோன்ற சோதனைக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.
இது ஒரு ஆணாதிக்க மனோபாவம் கொண்ட சோதனை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் பாலியல் பாதிப்புக்கு ஆளான நபரின் பாலியல் வரலாற்றை தெரிந்துகொள்ள 10 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனை இன்றும் நடத்தப்படுவது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் கூறினர்.
பெண்களை மனரீதியாக பாதிக்கும் இருவிரல் பரிசோதனைக்கு தடைவிதிப்பதாகக் கூறிய நீதிபதிகள், அதனை மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இருவிரல் பரிசோதனை தொடர்பான பாடங்களை நீக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தீர்ப்பின் நகல்களை சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கவும், அதை மாநிலங்களின் சுகாதாரம் மற்றும் உள்துறைகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
உள்துறை அமைச்சகங்கள் இந்த தீர்ப்பை மாநிலங்களில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலை.ரா
செந்தில்பாலாஜி மீதான பணமோசடி வழக்கு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
“அமைச்சர் தான் ஆனால் வெட்கத்தை விட்டு சொல்கிறேன்” : கே.என்.நேரு