தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள NALSAR சட்டப் பல்கலைக்கழகத்தின் 19வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நேற்று (பிப்ரவரி 25) கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகின்றன. இந்த எண்கள் வெறும் புள்ளிவிவரம் அல்ல. தற்கொலை செய்த மாணவர்கள் ஒவ்வொருவரும் சில நூற்றாண்டுகளாக நிகழ்ந்த பல போராட்டங்களின் அடையாளம்.
சமீபத்தில் மும்பை ஐஐடியில் தலித் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைப் படித்தேன். கடந்த ஆண்டு ஒடிசாவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆதிவாசி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதை அது நினைவூட்டியது.

இந்திய கல்வி நிறுவனங்களில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெவ்வேறு சவால்களை எதிர்கொள்வதை நாம் உணர வேண்டும்.
இந்திய கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடையே மதிப்பெண் போட்டியை ஊக்குவிப்பதில் மட்டும் தங்களை நிறுத்திக்கொள்ள கூடாது. தங்களுடைய வாழ்வில் அன்பும், அக்கறையும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் வகையில் மாணவர்களை பழக்கப்படுத்த வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் சக மாணவர்கள் இடையே அன்பும், அக்கறையும் இல்லாதது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் அவற்றை மாணவர்களிடையே வளர்ப்பதன் மூலம் சமூக வேறுபாடுகளையும், சாதி வெறுப்பையும் கல்வி நிறுவனங்களில் இருந்து கலைக்க முடியும்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், “கல்வி நிறுவனங்களில் நுழைவு மதிப்பெண்களின் அடிப்படையில் விடுதிகளை ஒதுக்குவது மாணவர்களிடையே சாதி அடிப்படையிலான பிரிவினைக்கு வழிவகுக்கிறது.
குறிப்பிட்ட சமூகத்தினரின் உடல் தோற்றம், நிறம் மற்றும் ஆங்கில அறிவு ஆகியவற்றை கேலி செய்வது அவர்களிடையேயான இடைவெளியை அதிகரிக்கிறது.” என்று வேதனை தெரிவித்தார்.
மேலும் தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களின் நோக்கத்தையும், அவை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் சந்திரசூட் விளக்கினார்.
அவர், “தேசிய சட்டப் பல்கலைக் கழகங்கள் சாதி வேறுபாடுகளை உருவாக்கும் இடமாக இருக்ககூடாது. மாறாக தரமான கல்வியில் கவனம் செலுத்தக்கூடிய, அனைத்து சமூக மாணவர்களும் அணுகக்கூடிய நிறுவனங்களை உருவாக்கும் இடமாக இருக்க வேண்டும்.
தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் பின்தங்கிய சமூக பிரிவினர் அணுகுவதற்கு போராடி வருகின்றனர். இங்கு பின்பற்றப்படும் நுழைவுத் தேர்வு முறை கவலை அளிக்கிறது. இது ஆங்கிலம் நன்கு அறியாத மாணவர்களுக்கு ஒரு தடையாக உள்ளது.
இவற்றுடன் மோசமான பொருளாதார நிலையும் அவர்கள் தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களை அணுகுவதை தடை செய்கின்றன. இதற்கு சட்டப் பல்கலைக்கழகங்களும், மத்திய, மாநில அரசுகளும் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும்.” என்று நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர், ”36 சட்டப் பட்டதாரிகள் பட்டியலிடப்பட்ட பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் இந்தியாவின் வெற்றிகரமான வழக்கறிஞர்களாகவும் நீதிபதிகளாகவும் மாறுவார்கள். இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மத்திய அரசு அதிகாரத்தின் உச்ச நீதிமன்றம் அல்ல. மாறாக இது தேசத்தின் நீதிமன்றம் என்று நான் நம்புகிறேன்,” என்று தலைமை நீதிபதி கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
எந்த சூரியனும் நிறுத்த முடியாது! – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
கொலீஜியத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை: கே.சந்துரு