கடந்த 2004 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக, இந்திய கடற்கரை முதன் முறையாக சுனாமி என்ற பேரிடரை சந்தித்தது.
முன்னதாக , 2002 ஆம் ஆண்டு வெளியான அன்பே சிவம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் சுனாமி பற்றியும் பேசியிருப்பார். சுனாமி பற்றி செய்தி வெளியிட்ட தமிழின் பிரபல பத்திரிகை ஒன்று ‘டிசுனாமி ‘ என்று குறிப்பிட்டிருந்தது. அந்தளவுக்கு நமது நாட்டுக்கு புதுமையான வார்த்தையாக அது இருந்தது.
அதுவரை, கண்டிராத அந்த பேரிடரை இந்தோனேஷியா, மலேசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் எதிர் கொண்டன. உலகம் முழுக்க 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் இந்த சுனாமிக்கு பலியானார்கள்.

தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் மக்கள் இறந்தனர். சுனாமியால் இலங்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையில் மட்டும் 35 ஆயிரம் பேர் இறந்தனர். இந்த பேரிடரில் இருந்து அதிசயமாக தப்பித்த குழந்தை ஒன்றுதான் இப்போது 20 வயது இளைஞராக மாறியுள்ளார்.
இலங்கையின் கல்முனை பகுதியை சேர்ந்தவர் முருகுபிள்ளை ஜெயராசா. சுனாமி தினத்தில் முருகுபிள்ளையின் மனைவி, தாய், 2 மாத கைக்குழந்தையான அபிலாஷ் ஆகியோரை தண்ணீர் அடித்து சென்று விட்டது. முதலில் தனது மனைவியையும் தாயையும் முருகுபிள்ளை கண்டுபிடித்து விட்டார். ஆனால், 2 மாத கைக்குழந்தையை மட்டும் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இந்த சமயத்தில் குழந்தையை மீட்ட மீட்புப்படையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் 81வதாக சேர்க்கப்பட்ட உயிர் அது. அபிலாஷ் குழந்தையாக இருந்ததால், மருத்துவமனையில் பேபி 81 என்று பெயர் சூட்டி அழைத்துள்ளனர்.
பின்னர், தங்கள் குழந்தை மீட்கப்பட்டது குறித்து முருகுபிள்ளைக்கு தெரிய வந்துள்ளது. மருத்துவமனைக்கு ஓடி சென்று பார்த்துள்ளார். அது, தன் குழந்தைதான் என்பதையும் உறுதி செய்தார்.
ஆனால், மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு 9 பெற்றோர் உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தனர். இதனால், நீதிமன்றத்துக்கு பிரச்னை போனது. இதையடுத்து, நீதிமன்றம் டி.என்.ஏ சோதனைக்கு அழைப்பு விடுத்தது.
டி.என்.ஏ சோதனை என்றதும் உரிமை கொண்டாடிய மற்றவர்கள் காணாமல் போக, உண்மையான பெற்றோர் டி.என்.ஏ சோதனைக்கு சாம்பிள்களை கொடுத்தனர். இப்படிதான், அபிலாஷ் தனது பெற்றோருடன் 2 மாத குழந்தையாக மீண்டும் சேர்ந்தார்.
அபிலாஷின் கதையை கேள்விப்பட்ட பல சர்வதேச மீடியாக்கள் பேட்டியெடுத்தன. ஒரு முறை பேட்டி கொடுக்க பிரிட்டனுக்கே அபிலாஷின் பெற்றோர் சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, 20 வயதாகும் அபிலாஷ், தகவல் தொழில்நுட்பம் படிக்க ஆசைப்படுகிறார். பள்ளியில் படிக்கும் போது, சுனாமி பாய், பேபி 81 என்று பலரும் அவரை கேலி செய்துள்ளனர். ஆனால், கேலிகளை பொருட்படுத்தாமல் இன்று ‘சர்வைல்’ என்பதற்கு உறுதியான சான்றாக மாறியுள்ளார் அபிலாஷ்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்