நடிகர் புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட இருக்கும் கர்நாடக ரத்னா விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, இன்று (நவம்பர் 1) பெங்களூரு புறப்பட்டுச் சென்ற நடிகர் ரஜினிகாந்த்துக்கு கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் சுதாகர் உற்சாக வரவேற்பு அளித்தார்.
கன்னட திரையுலகின் பவர் ஸ்டாரான மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, கர்நாடகத்தின் மிக உயரிய விருதான ’கர்நாடக ரத்னா’ விருது வழங்கப்பட இருக்கிறது.இவ்விருதை 10வது நபராக புனித் ராஜ்குமார் பெறுகிறார்.
இந்த விருது பெறும் விழா, இன்று மாலை (நவம்பர் 1) விதான் சவுதாவில் நடைபெறவுள்ளது. இந்த விருதை, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, புனித் ராஜ்குமாரின் மனைவியான அஸ்வினியிடம் வழங்க இருக்கிறார்.

இந்த விழாவில் கெளரவ விருந்தினர்களாக கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி, மேல்சபை தலைவர் ரகுநாத் மல்காபுரே, சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர்., இன்போசிஸ் அறக்கட்டளை தலைவி சுதா மூர்த்தி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக, நடிகர் ரஜினிகாந்த், இன்று (நவம்பர் 1) தனி விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.
பெங்களூரு விமான நிலையத்தில் ரஜினிகாந்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு புனித் ராஜ்குமார் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
சென்னை கனமழை: நள்ளிரவு முதல் ஆய்வுசெய்யும் மேயர்!
தமிழகத்தின் வழியில் குஜராத்: மோர்பி செல்லும் மோடிக்கு கடும் எதிர்ப்பு!