மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு: விசாரிக்கிறது கோவை தனிப்படை!

இந்தியா

மங்களூருவில் ஆட்டோ குண்டு வெடிப்பிற்கும் கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் கனகன்டி காவல்நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 19 ஆம் தேதி மாலை 5.15 மணியளவில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென வெடித்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

விபத்தில் ஆட்டோவில் வந்த பயணியும் ஆட்டோ ஓட்டுநரும் படுகாயம் அடைந்தனர். எரிந்த நிலையில் இருந்த ஆட்டோவில் குக்கர் மற்றும் பேட்டரிகள், சர்க்யூட் வயர்களை போலீசார் கைப்பற்றினர்.

மேலும், ஆட்டோவில் பயணம் செய்த நபரிடமிருந்து ஓர் ஆதார் அட்டையை கைப்பற்றினர். அதுவும் போலியானது என்று தெரியவந்தது.

இதுதொடர்பாக பெங்களூரு சிறப்பு தனிப்படை விசாரணையில் இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சதி என்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகளும் மங்களூரு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோ வெடித்ததில் காயமடைந்த நபர் சிமோகா மாவட்டத்தைச் சேர்ந்த சாரிக் என்பதும், அவர் பல்வேறு தீவிரவாதம் தொடர்பான வழக்குகளில் தலைமறைவாக உள்ளவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிமோகா மாவட்டத்தில் சாரிக் சொந்த கிராமமான தீர்த்த ஹள்ளியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் கர்நாடக போலீசார் இன்று(நவம்பர் 21) காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாரிக் வீடு அவரது உறவினர்கள் வீடு மற்றும் அவரது நண்பர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மங்களூரு நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமான இருந்த ஆட்டோ பயணி கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வந்த தகவலும் கிடைத்துள்ளது.

அண்மையில் கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பிற்கு இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரித்து வரும் கோவை தனிப்படை போலீசும் மங்களூரு விரைந்துள்ளது.

கலை.ரா

தமிழகத்தில் சட்டவிரோத வாகனப் பதிவு: போக்குவரத்துத் துறை அதிரடி!

மாரி செல்வராஜ் வாழை படத்தின் கதை இது தானா!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1