சந்திரயான் 3 லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவின் பிரிக்ஸ் மாநாட்டுக்கு சென்று இந்தியா திரும்பிய உடன் முதல் பயணமாகப் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு இன்று (ஆகஸ்ட் 26) சென்றார். இஸ்ரோ விஞ்ஞானிகள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தின் வரலாற்று சிறப்புமிக்க டச் டவுன் எல்லையற்ற பிரபஞ்சத்தில் இந்தியாவின் அறிவியல் சாதனையின் கர்ஜனை.
இந்த சாதனை மூலம் நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இன்று, சந்திரயான் என்ற பெயர் இந்தியக் குழந்தைகளிடையே எதிரொலிக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் தனது எதிர்காலத்தை விஞ்ஞானிகளிடம் காண்கிறார்கள்.
இன்று, முழு உலகமும் இந்தியாவின் அறிவியல் மனப்பான்மை, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் மனோபாவத்தின் வலிமையைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய இடம் ‘சிவசக்தி’ என்று அழைக்கப்படும். ஆகஸ்ட் 23 அன்று, இந்தியா நிலவில் கொடியை ஏற்றியது. இனி, அந்த நாள் இந்தியாவில் தேசிய விண்வெளி தினமாக அறியப்படும்” என்றார்.
சந்திரயான் 3 மிஷனை வெற்றி பெற செய்த விஞ்ஞானிகளுக்கு சல்யூட் அடித்த பிரதமர், “சந்திரயான் -2 அதன் முத்திரைகளை விட்டுச் சென்ற சந்திரப் புள்ளி ‘திரங்கா புள்ளி’ என்று அழைக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், “வர்த்தகம் முதல் தொழில்நுட்பம் வரை, முதல் வரிசையில் நிற்கும் நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது.
‘மூன்றாவது வரிசையில்’ இருந்து ‘முதல் வரிசை’ வரையிலான பயணத்தில், நமது ‘இஸ்ரோ’ போன்ற நிறுவனங்கள் பெரும் பங்காற்றியுள்ளன.
21 ஆம் நூற்றாண்டின் இந்த காலகட்டத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் நாடு முன்னேற்றம் அடையும்” என்று தெரிவித்தார்.
மோனிஷா