இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை செலுத்தி வான்வழி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அமெரிக்கா, பிரிட்டிஷ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளன.
கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது ஆளில்லா விமானம் மூலம் இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ ஜெனரல் முகமது ரேசா ஜாஹிதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதனால் எந்த நேரத்திலும், இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல்களை ஈரான் நேற்று (ஏப்ரல் 13) இரவு தொடங்கியுள்ளது. இது உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கடமை தவறிவிட்டது!
இதுகுறித்து ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதில் தனது கடமையில் இருந்து தவறிவிட்டது.
இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் தங்கள் எல்லைக்கோடுகளை மீறுவதற்கும், சர்வதேச சட்டத்தின் அடிப்படை கொள்கைகளை மீறுவதற்கும் அனுமதிக்கிறது.
இஸ்ரேல் ராணுவம் மீண்டும் ஏதேனும் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டால், பதிலடி தாக்குதல் கடுமையாக இருக்கும்.
ஐநா சாசனத்தின் 51-வது பிரிவில் குறிப்பிட்டுள்ள தற்காப்புக்கான ஈரானின் உரிமைகளை பயன்படுத்தி தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
99 சதவீத ஏவுகணைகள் இடைமறிப்பு!
இதனையடுத்து ஈரானின் தாக்குல் குறித்து இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், “ஈரான் ஏவிய 99 சதவீத ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளது. எனினும் இஸ்ரேலில் உள்ள ஐடிஎஃப் தளம் உள்பட சிறிய கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. இரண்டு இளம் பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் போர் நடவடிக்கையை தொடங்கியுள்ளதை அடுத்து ஐநா சபையில் அவசர கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் கூறும்போது, ”பேரழிவை ஏற்படுத்தும் இந்த தாக்குதலின் ஆபத்து குறித்து நான் மிகவும் கவலையடைந்தேன். ராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
போர்க்கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ”இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெதன்யாகுவை தொடர்புகொண்டு அமெரிக்காவின் ஆதரவை தெரிவித்தேன். ஈரானின் தாக்குதலுக்கு எதிராக ஜி7 நாட்டின் தலைவர்களுடன் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
பிரிட்டிஷ் ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தின!
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், “இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஈரான் ஏவிய ஆளில்லா விமானங்களை பிரிட்டிஷ் ராணுவ ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. எங்கள் விமானங்கள் பல ஈரானிய தாக்குதல் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தின என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.
இந்தத் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால், பிராந்திய ஸ்திரத்தன்மை வீழ்ச்சி என்பது கடினமாக இருக்கும். இஸ்ரேல் மற்றும் பரந்த பிராந்தியத்தின் பாதுகாப்பிற்காக நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம். இது உள்நாட்டின் பாதுகாப்பிற்கு நிச்சயமாக முக்கியமானது” என்று அவர் தெரிவித்தார்.
தூதர்களுக்கு சம்மன்!
இதற்கிடையே இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு எதிர்வினையாற்றியதை தொடர்ந்து பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி நாட்டு தூதர்களுக்கு ஈரான் சம்மன் அனுப்பியுள்ளது.
“நமது நாட்டின் தேசங்கள் மற்றும் நலன்களுக்கு எதிரான சியோனிச ஆட்சியின் (இஸ்ரேல்) நடவடிக்கைகளுக்கு ஈரானின் பதிலடி குறித்து பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் நாடுகளின் சில அதிகாரிகள் பொறுப்பற்ற கருத்துகளை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக தற்போது வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”தமிழக அரசின் வருமானம் எங்கே செல்கிறது?” : அண்ணாமலை கேள்வி!
“அருகதையே இல்லை” : பாஜக தேர்தல் அறிக்கை குறித்து செல்வப்பெருந்தகை
மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்?
2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டி: விஷால் அறிவிப்பு!