ஈக்வாடரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 14 பேர் உயிரிழப்பு!
ஈக்வாடரில் இன்று (மார்ச் 19) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈக்வாடர் குவாயாஸ் மாகாணத்தில் உள்ள பாலாவ் நகரத்திலிருந்து (வடக்கு பெருவின் கடலோரப் பகுதி) 10கிமீ தொலைவில் 66.4கிமீ ஆழத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது இந்திய நேரப்படி காலை 5.42 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 380-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 44 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளதாகவும் 90 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. சுமார் 50 கல்வி கட்டிடங்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், சில சாலைகளில் இடிந்த கட்டிடங்கள் போக்குவரத்தை தடை செய்துள்ளது. சாண்டா ரோசா விமான நிலையத்திலும் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளை சரி செய்யும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலநடுக்கம் குறித்து ஈக்வாடர் அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ, ட்விட்டரில், “இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் சேதங்களை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் உங்களுடன் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்தவும் எனது அர்ப்பணிப்பையும் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட 7.8ரிக்டர் நிலநடுக்கத்தில் சிக்கி 50ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், கஜிகிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
“பத்து தல” இசை வெளியீடு: சிம்பு சொன்ன பஞ்ச்!
ISL Final: கோப்பையை கைப்பற்றியது மோகன் பகான் அணி!