டெல்லியில் அவ்வப்போது காற்று மாசு தீவிரமடைவது வாடிக்கையாக உள்ளது. தற்போது இந்த ஆண்டின் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு 400-க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக முண்ட்கா பகுதியில் 498 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. காற்றின் தரக் குறியீடு 400ஐ கடக்கும்போது அது அபாய கட்டமாகக் கருதப்படுகிறது. இந்த அளவுக்கு மாசுபட்டுள்ள காற்றை சுவாசித்தால் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களும் நோயால் பாதிக்கப்படுவார்கள் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் தொடர்ந்து காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் மக்கள் ஆஸ்துமா, சுவாசப்பிரச்சனை, தலைவலி, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் டெல்லியில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு நுரையீரல் தொடர்பான நோய், ஆஸ்துமா ஆகியறவற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, டெல்லி மக்கள் சுத்தமான காற்றுக்காக ஏங்க தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து, டெல்லியில் 7 ஆக்சிஜன் பார்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு மக்கள் 20 நிமிடத்துக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க ரூ.299 முதல் ரூ.499 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மசாஜ் செய்யும் சேரில் அமர்ந்து வாடிக்கையாளர்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். தினமும் 30 பேர் வரை சுத்தமான ஆக்சிஜனை சுவாசித்து செல்கிறார்கள். இந்த காற்று 80 முதல் 90 சதவிகிதம் வரை சுத்தமானது என்று கூறுகிறார்கள். எனினும், சுத்தமான காற்றை ஆக்சிஜன் பார்களில் சென்று சுவாசிப்பதும் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
புதுக்கோட்டை: பாஜக, அதிமுக நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!
‘எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது’… ஹாலிவுட் ஸ்டைலில் ‘விடாமுயற்சி’ டீசர்!