உலகம் முழுவதும் VAXZERVIA வகை கொரோனா தடுப்பூசிகளை வணிக காரணங்களுக்காக திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல கோடி உயிரழப்பை ஏற்படுத்தியது. இதனால் உலக முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்தன.
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் விநியோகிக்கப்பட்டது. பல நாடுகளிலும் இந்த கோவிஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவில் மட்டும் சுமார் 175 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருந்தது.
இதனைத் தொடர்ந்து, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும், பக்க விளைவுகளும் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு பிரிட்டன் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில், கோவிஷீல்ட் தடுப்பூசி மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் என்ற பக்கவிளைவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கோவிஷீல்டு தடுப்பூசியானது பக்கவிளைவுகளை தரும் என அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரத்த உறைவு, ரத்த பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் இந்த தடுப்பூசி மூலம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய மருத்துவ நிபுணர் குழுவை அமைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், உலக அளவில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கொரோனா தடுப்பூசிகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸ்களை எதிர்கொள்ளும் வகையில் அப்டேட் செய்யப்பட்ட தடுப்பூசிகள் அதிகளவில் தற்போது சந்தையில் உள்ளன. இதனால் VAXZERVIA தடுப்பூசிக்கான தேவை எழவில்லை என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தொடர்ந்து, இந்த கொரோனா தடுப்பூசிகளின் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஏற்கனவே நிறுத்திவிட்டதாக அஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விழுப்புரம் ஸ்டிராங் ரூமில் சிசிடிவி மீண்டும் பழுது : ஆட்சியர் விளக்கம்!
Gold Rate: இதுக்கு தங்கம் விலை குறையாமலே இருக்கலாம்… எதுக்கு?