வக்ஃபு சட்டத்திருத்த மசோதா விவரங்களை மத்திய அரசு மறைப்பது ஏன்? என்று நாடாளுமன்ற கூட்டுக்குழு அமர்வில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை கொறடாவுமான ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
வக்ஃபு சட்டத்திருத்த மசோதா 2024-ஐ மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த மசோதா பல தரப்பு மக்களால் விமர்சிக்கப்பட்டதால், மசோதாவை விவாதிக்க 21 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆகஸ்ட் 9-ஆம் தேதி அமைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 6) நடந்த இந்த குழுவின் நான்காவது அமர்வில், பங்கேற்ற இந்தியத் தொல்லியல்துறை ஆணையம், “இந்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிற 53 நினைவுச்சின்னங்களை, வக்ஃபு வாரியம் வக்ஃபு சொத்துக்கள் என்று அறிவித்துள்ளது.
இதனால் அந்நினைவுச் சின்னங்களை நிர்வகிப்பதில் எங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்க வக்ஃபு சட்டத்திருத்த மசோதா 2024 உதவும்” என்று தெரிவித்தது.
இதற்குமுன் வியாழக்கிழமை(செப்டம்பர் 5) நடந்த இந்த குழுவின் மூன்றாவது அமர்வில் “ பிரிட்டிஷ் அரசு தங்களுடைய ஆட்சிக் காலத்தில், டெல்லியில் புதிய தலைநகரம் கட்டுவதற்காக 341 சதுர கிலோமீட்டர் அளவிலான நிலத்தை அதற்குரிய இழப்பீட்டை வழங்கி கையகப்படுத்தியிருந்தது.
ஆனால், 1970 முதல் 1977 வரையுள்ள இடைப்பட்ட காலத்தில், வக்ஃபு வாரியம் டெல்லியில் உள்ள 138 சொத்துக்கள் மீது உரிமை கோரியது. இதனால் பல வழக்குகள் தொடரப்பட்டன” என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த குழுவின் உறுப்பினரான அசாதுதின் ஒவைசி “வக்ஃபு வாரியம் தான் நினைத்த இடத்தை எல்லாம், வக்ஃபு சொத்துகளாக அறிவிக்காது. இதை மத்திய சிறுபான்மை நலத்துறை புரிந்துகொள்ள மறுக்கிறது. வஃக்பு வாரியம் சரியான தரவுகள் இருந்தால்தான் ஒரு சொத்தை வக்ஃபு சொத்து என்று அறிவிக்கும்.
ஒருவேளை தவறுதலாக ஒரு சொத்து வஃக்பு சொத்து என்று அறிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட தரப்பு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், சிறுபான்மை நலத்துறையோ, ஒரு சொத்தின் மீது அரசு உரிமை கோரினால், அதை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்ல நினைக்கிறது” என்றார்.
ஆ ராசா கேள்வி!
மேலும் இந்த அமர்வில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, “வக்ஃபு சட்டம் 1913 ஆண்டே நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதை ஏன் அரசு மறைக்கிறது?” என்று கேள்வி கேட்டார். இதுமட்டுமல்லாமல் இந்த குழுவில் உள்ள எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், “17-ஆம் நூற்றாண்டிலிருந்து வருகிற மஸ்ஜித் போன்ற சொத்துக்கள் மீது அரசு ஏன் உரிமை கொண்டாட நினைக்கிறது?” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையில், வக்ஃபு சட்டத்திருத்த மசோதா சம்பந்தமாக பொது மக்கள் மற்றும் மற்ற நிறுவனங்களிடம் இருந்து 8 லட்சம் மனுக்கள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள்… விராட் கோலிக்கு எத்தனையாவது இடம்?
மகா விஷ்ணு எங்கே? – ஓட்டுநர் கேள்வி!
பனையேறும் பால்பாண்டி செய்த பனை ஓலை விநாயகர்!