“இது ராகுலுக்கே சங்கடம் தான்”: அசோக் கெலாட் உரை குறித்து அண்ணாமலை

இந்தியா


ராஜஸ்தான் சட்டப்பேரவையில் முதல்வர் அசோக் கெலாட் பழைய பட்ஜெட்டை வாசித்தது பேசுபொருளாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் நிதியமைச்சராகவும் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆளும் ஒரே மாநிலம் ராஜஸ்தான் தான். அதனால் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில் இன்று காலை அவை கூடியதும் முதல்வர் அசோக் கெலாட் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார். சில நிமிடங்களில் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் மகேஷ் ஜோஷி, இது கடந்த வருட பட்ஜெட் என்று கூற, உடனடியாக சுதாரித்துக்கொண்ட அசோக் கெலாட் தனது உரையை நிறுத்தினார். தவறுதலாக பட்ஜெட் உரையை நிகழ்த்தியதற்காக மன்னிப்பும் கோரினார்.

இதனால் பாஜக எம்.எல்.ஏ.க்கள் அவை நடுவே திரண்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 30 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, “கடந்த ஆண்டு பட்ஜெட்டை வாசிக்கிறோம் என்று தெரியாமலேயே 8 நிமிடங்கள் வாசித்த முதல்வரின் கையில் இந்த மாநிலம் எப்படிப் பாதுகாப்பாக இருக்க முடியும்.

ஒரு மாநில முதல்வர் பட்ஜெட்டை படிக்காமலே நேரடியாக வந்து உரை நிகழ்த்தியுள்ளார். இப்படி நடந்தது வரலாற்றிலேயே இதுதான் முதன் முறையாக இருக்கும். நான் முதலமைச்சராக இருக்கும் போது ஒருமுறைக்கு இருமுறை படித்து பார்த்துவிட்டு தான் அவைக்கு வருவேன். அவ்வளவு முக்கிய ஆவணத்தை எடுத்துக்கொண்டு அவைக்கு வரும் முதல்வர் படித்துக்கூடப் பார்க்கமாட்டாரா?. இதிலிருந்தே மாநிலத்தின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என அனைவருக்கும் தெரியவந்திருக்கும்” என்று விமர்சித்தார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திர ரத்தோர், ”பட்ஜெட் ஏற்கெனவே கசிந்துவிட்டதோ என்ற கேள்வி எழுகிறது. இந்த பட்ஜெட்டை அவையில் சமர்ப்பிக்கக் கூடாது. கடந்த ஆண்டு பட்ஜெட் உரையை வாசித்ததன் மூலம் சட்டப்பேரவையை முதல்வர் அசோக் கெலாட் அவமதித்துவிட்டார்” என்றார்.

இதன்பின் மீண்டும் அவை கூடியதும் பழைய பட்ஜெட் வாசிக்கப்பட்டதற்கு விளக்கமளித்த அசோக் கெலாட், “பட்ஜெட் உரையின் நகல் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் வாசிக்கும் உரைக்கும், உங்கள் கையில் இருக்கும் உரைக்கும் வித்தியாசம் இருந்தால் சொல்லுங்கள். முன்பு என்னிடம் வழங்கப்பட்ட உரையில் ஒரு பக்கம் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அதைத் தவிர பட்ஜெட் ஆவணம் கசியவில்லை” என்று குறிப்பிட்டார்.

எனினும் பாஜகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கோஷத்துக்கு மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றியது போல் இன்று ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பாஜகவினர் கோஷங்களுக்கு மத்தியில் உரை நிகழ்த்தினார் அசோக் கெலாட்.

பழைய நிதிநிலையை வாசித்தது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் ஆட்சியில் மாநிலம் எவ்வளவு பாதுகாப்பானதாக இருக்கிறது என பாருங்கள். இப்படிப்பட்ட தலைவர்களா?. அசோக் கெலாட்டின் செயல் ராகுல் காந்திக்கே சங்கடமாக இருக்கும்” என்று விமர்சித்துள்ளார்.
பிரியா

சமந்தாவின் ‘சாகுந்தலம்’: ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

இடைத்தேர்தல் பூகம்பத்தில் அதிமுக மறைந்துவிடும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *