காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் தலைமை கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
காந்தி குடும்பம் அல்லாத ஒருவரை காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கும் நோக்கில், காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல், அக்டோபர் மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளே திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் சார்பில், அவரது ஆதரவாளர் ஆலிம் ஜோவரி வேட்புமனு படிவங்களை பெற்றுச் சென்றார்.
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறியிருந்தார். செப்டம்பர் 30ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்பதால் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சி தலைவர் ஆவதில் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஒருவருக்கு ஒரு பதவிதான் என்ற விதிப்படி, அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ராஜஸ்தான் முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்நிலையில் புதிய முதல்வரை தேர்தெடுப்பது தொடர்பாக செப்டம்பர் 25ஆம் தேதி மாலை அசோக் கெலாட் வீட்டில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
ஆலோசனை செய்ய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அஜய் மக்கான் ராஜஸ்தான் வந்தனர்.
ஆனால் திட்டமிட்டப்படி ஆலோசனை கூட்டம் நடைபெறவில்லை. இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வெறும் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அசோக் கெலாட் ஆதரவு அமைச்சர் சாந்தி தரிவால் இல்லத்தில் தனியாக ஒரு கூட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து பேருந்தில் ராஜஸ்தான் சபாநாயகர் சிபி ஜோஷி இல்லத்திற்கு சென்றனர்.
அசோக் கெலாட்டிற்குப் பதிலாக சச்சின் பைலட் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நாங்கள் ராஜினாமா செய்துவிடுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அஜய் மக்கான் ஆகிய இருவரையும் சந்திக்க மறுத்தனர்.
அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே, ராஜஸ்தான் முதல்வரை கெலாட் தான் அறிவிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர்.
இந்த சம்பவம் குறித்து “என்னுடைய கையில் எதுவும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கோபத்தில் உள்ளனர்” என அசோக் கெலாட் காங்கிரஸ் மேலிடத்திடம் தெரிவித்துள்ளார்.
அதேசமயத்தில் 92 சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக் கெலாட் உதவியில்லாமல் பகிரங்கமாக ராஜினாமா செய்வோம் என்று மிரட்ட முடியாது என்றும், இதற்கு முன்னதாக இதுபோன்று நடந்ததில்லை என்றும் தலைமை அதிருப்தியில் உள்ளது.
அதாவது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, மக்கான் ஆகிய இருவரையும் மதிக்காமல் அசோக் கெலாட் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயல்பட்டதால், காங்கிரஸ் தலைமை கெலாட் மீது கடும் அதிருப்தியில் உள்ளது.
இதனால் காங்கிரஸ் தலைமையிடம் அசோக் கெலாட் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்தசூழலில், தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவதில், காங்கிரஸ் தலைமை நிர்வாகிகள் மற்றும் சோனியா காந்திக்கு விருப்பமில்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே அசோக் கெலாட்டுக்கு பதிலாக, மல்லிகார்ஜூன கார்கே, திக் விஜய்சிங், கமல்நாத், மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த குமாரி செல்ஜா போன்றோரை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட காங்கிரஸ் தலைமை விருப்பம் தெரிவித்துள்ளது.
இதில் ராகுல் காந்தியின் விருப்பமாக கே.சி.வேணுகோபால் உள்ளார்.
ஆனால் கமல்நாத், சோனியா காந்தியை சந்தித்து தான் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
எடப்பாடிக்கு எதிரான வழக்கு : செப் 30ல் விசாரணை!
அமைச்சர் சேகர்பாபு அண்ணன் தற்கொலை: காரணம் என்ன?