நமது பக்கத்து நாடானா சீனா இப்போது ஒரு போலி சூரியனை தயாரித்து கொண்டிருக்கிறது. அதாவது, இப்போது சீனா ஒரு செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளது. நிஜ சூரியனை விட இந்த சூரியன் 7 மடங்கு அதிக வெப்பத்தை வெளியிடும் என சொல்லப்படுகிறது.
வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சீனா முயற்சித்து கொண்டிருக்கிறது. சீனா தயாரிக்கும் இந்த செயற்கை சூரியன் அணுக்கரு இணைப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். அதாவது இயற்பியலில் நியூக்ளியர் ஃபியூஷன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயற்கை சூரியனை சீனா உருவாக்கியுள்ளது.
இந்த சூரியனை அவ்வப்போது இயக்கி பார்த்து சீனா வெப்ப நிலையை சோதித்து கொண்டிருக்கிறது. 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை செயற்கை சூரியன் தந்தாலும், அதை நீண்ட நேரத்துக்கு தொடர்ந்து தக்க வைப்பது சவாலாக இருந்தது. கடைசியாக 2023 ஆம் ஆண்டு செயற்கை சூரியன் 403 விநாடிகளுக்கு 100 மில்லியன் டிகிரி வெப்பத்தை தொடர்ச்சியாக தந்தது.
இந்த நிலையில் ,செயற்கை சூரியனை 1,000 விநாடிகள் நேரத்துக்கு தொடர்ந்து, 100 மில்லியன் டிகிரி வெப்ப நிலையை எட்ட வைத்து சீன விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். இது செயற்கை சூரியனை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது.
பூமியில் இருந்து 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உண்மையான சூரியன் உள்ளது. உண்மையான சூரியனின் மையப்பகுதியே 15 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பம்தான் கொண்டுள்ளது.
இயற்கை சூரியனின் மையப் பகுதியே 15 மில்லியன் டிகிரி வெப்பத்தை தாண்டாத நிலையில், சீன விஞ்ஞானிகள் 1000 விநாடிகள் நேரத்துக்கு 100 மில்லியன் டிகிரி வெப்பத்தை உருவாக்கியது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
தென்கொரியாவும் இதே போல ஒரு செயற்கை சூரியனை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த சூரியனும் 100 மில்லியன் டிகிரி வெப்பத்தை தந்துள்ளது. இந்த சூரியன் 48 விநாடிகள் நேரத்துக்கு மட்டுமே இந்தளவு வெப்பத்தை தந்தது. ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் செயற்கை சூரியனை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.