வழுக்கி விழுந்ததே வயநாடு!

Published On:

| By Minnambalam

ஸ்ரீராம் சர்மா 

வயநாடு என்னும் பேரழகுப் பூமி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரம் அது. 

மொத்த கிராமமும் அயர்ந்து இருந்த அந்த அதிகாலை நேரத்தில், ஏறத்தாழ 20 டிகிரி சாய்மானத்தில், மடமடவென மலையிறங்கி வந்து கொண்டிருந்தது அந்த நாசகாரம்… 

சற்றே விழித்து இருந்தவர்களுக்கும் கூட அது கடந்த நாட்களாக சடசடவென பெய்து கொண்டிருந்த மழையின் ஓசையாகவே கேட்டிருக்கக் கூடும்.  

20 டிகிரி என்பதன் சாய்மான அளவை ஏறத்தாழ குழந்தைகள் விளையாடும் சறுக்கு மரம் போல எனப்புரிந்து கொள்ளலாம். 

ஆக, 20 டிகிரி சாய்மானத்தில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள், செடிகள், கொடிகள் மற்றும் மலைக் குப்பைகள் யாவும் ஒட்டு மொத்தமாக அடி மண்ணோடு பிடுங்கிக் கொண்டு அடைமழையோடு சேர்ந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு விறுவிறுவெனப் பயணப்பட்டு வந்திருக்கிறது என்றால் அதன் இறுதி வேகம் ஏறத்தாழ மணிக்கு 260 கிமீ ஆக இருந்திருக்கக் கூடும் என்கிறது கணக்கு.  அது புல்லட் ரயிலின் வேகமாகும். எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. 

அங்கே ஓடிக் கொண்டிருந்த ‘இருவாஞ்சிப்புழா’ நதியின் மீது அந்த இரண்டு ஏக்கர் கனத்த குப்பைகளும் பொதேரென விழ, அது தன்னளவில் இருமடங்காகி பிளவுபட்டு தறிகெட்டு எழுந்து அண்டையில் இருந்த அப்பாவிக் கிராமங்களின் மேல் எகிறிப் பாய்ந்து குதறிவிட்டது.  

வயநாடு ஆதிகாலத்தில் ‘மாயா ஷேத்திரம்’ என்று அழைக்கப்பட்டதாக சொல்வார்கள். துரதிர்ஷ்டமாக மீண்டும் அந்தப் பெயருக்குப் பொருந்திப் போனது. முண்டக்கை, சூரல்மலை பகுதிகள் மொத்தமும் அடர்ந்த மலைக் குப்பைகளுக்கு அடியே மறைந்து போனது. அதன் மேல் விடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது.  

ஏறத்தாழ 300 மனித உயிர்கள் பலியாகிவிட்டதாகவும் 250 பேரைக் காணவில்லை என்றும் சொல்லப்பட்டாலும், உண்மையான சேதம் அதைவிடக் கூடுதலாகவே இருக்கக் கூடும் என அஞ்சுகிறார் அங்கே மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் வயநாட்டின் தலைநகர் கல்பத்தாவைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான ‘துர்க்கி ஜீவன் ரக்க்ஷா சமிதி’ யின் தலைவரான ஷிகாப் அபூபக்கர். 

பிரத்தியேகமாக சில ஃபோட்டோக்களையும் வீடியோக்களையும் அனுப்பியிருந்தார். துவண்ட சடலங்கள் – துண்டிக்கப்பட்ட உடலங்கள் என அந்தத் துயரத்தை கண் கொண்டு காண முடியவில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டில் அருகில் இருந்த புத்துமலையில் ஒரு மண் சரிவு ஏற்பட்டு 25 உயிர்கள் பலியானது. அப்போதே சுதாரித்திருந்தால் இவ்வளவு பெரிய இழப்பை தவிர்த்திருக்கலாம். மீண்டும் அங்கே குடியேறுவதையோ, வியாபாரம் செய்வதையோ நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை எனக் கம்மிய குரலில் சொல்கிறார் அங்கே பரம்பரையாக காஃபி எஸ்டேட் வைத்திருக்கும் நீலிகண்டி ப்ளாண்டேஷனின் உரிமையாளர் நண்பர் நியாஸ் அகமது. 

அண்டை மாநிலம் ஒன்று இப்படி சரிந்து கிடப்பதைக் காணச் சகிக்கவில்லை. அன்னைத் தமிழுக்கு மலையாள மொழி சகோதரி ஆகிறாள். உடன்பிறவா மலையாளிகளின் அவலம் அகற்றி சகோதரத்துவத்தை உயர்த்திப் பிடித்தாக வேண்டியது நமது கடமையாகிறது !  

தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக 5 கோடி நிவாரணத் தொகையை அறிவித்தது மட்டுமல்லாமல், திராவிட குடும்பத்தின் மூத்த நிலமான தமிழ்நாடு எந்த நிலையிலும் மலையாளிகளின் தோளோடு தோள் நிற்கும் என அறிவிப்பதைப் போல தனது முக்கிய அமைச்சரான மாண்புமிகு எ.வ. வேலு அவர்களை நேரில் அனுப்பி வைத்தார். கூடவே, தமிழகத்தின் வல்லமை மிக்க மீட்புப் பணிக் குழுவையும் கேரளாவுக்கு அனுப்பி வைத்தார்.  

அங்கே சென்று இறங்கிய ராணுவத்தின் பங்கு அபரிமிதமானது. 20 மணி நேரத்தில் 190 அடி நீள பாலத்தைக் கட்டி எழுப்பி சிக்கியிருந்தவர்களை மீட்ட ராணுவத்தை எத்தனை வாழ்த்தினாலும் தகும்.  

கொஞ்சமும் முகம் சுழிக்காமல் மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வ தொண்டு நிறுவன இளைஞர்களை வணங்கியாக வேண்டும். கேரளாவின் கோர விபத்தில் பலியான அனைத்து அப்பாவி உயிர்களுக்காகவும் மின்னம்பலத்தின் இந்தக் கட்டுரை நெஞ்சார்ந்த கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பித்துக் கொள்கிறது.  

கூடவே, அதன் காரணங்களையும், அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதையும் ஆராய வேண்டியிருக்கிறது. காண்போம். 

Article about Wayanad Landslide

ஏன் இந்த மலைச்சரிவு ? 

உயர்ந்து அகன்று நம் கண்ணில் தெரியும் ‘மலை’ என்பது ஒரே வஸ்து அல்ல.  

அது, பல பில்லியன் கோடி மண் துகள்களை ஒன்றிணைத்து உண்டாக்கப்பட்டிருக்கும் ஒரு கூட்டமைப்பு ஆகும். அதில் பல படிமானங்கள் (Layers) உண்டு. ஒவ்வொரு படிமானத்துக்கும் ஒவ்வொரு தாங்கு சக்தி உண்டு.  

அந்த தாங்கு சக்தியை தீர்மானிப்பதில் இயற்கையாக அங்கே விளையும் மரபார்ந்த மரங்களின், செடிகளின் வேர்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. அதில் நுண்ணுயிரிகளின் பங்கும் உண்டு. 

அப்படியான அந்த இயற்கை பிடிமானங்கள் வம்படியாக அங்கிருந்து அகற்றப்படும் போது சில மில்லியன் அல்லது பில்லியன் துகள்கள் தங்கள் தாங்கு சக்தியை இழந்து விடுகின்றன.  

பிடிமானம் இல்லாத நிலையில் மண் துகள்களின் அந்தக் கூட்டமைப்பு என்ன செய்யும்? மலையில் இருந்து விலகி ஈர்ப்பு விசையால் மளமளவென சரியத் துவங்கும். அந்த நேரம் பார்த்து பலத்த மழை பெய்தால் விலகும் வேகம் இன்னமும் கூடும். வீசி அடிக்கும் காற்றும் 20 டிகிரி சாய்மான விசையோடு சேர்ந்து கொள்ள பேரழிவை உண்டாக்கி விடும். விட்டது.     

******* 

இந்த உலகில் உயிர்த்திருக்கும் இனங்களில் நாணமற்றது என்றால் அது மனித இனம்தான் என்றே சொல்லத் தோன்றுகிறது. சற்று கவனியுங்கள்.  

உலகப் பரப்பில் 82 சதவிகிதம் மரங்களும், செடி கொடிகளுமாகத்தான் இருக்கிறது. 13 சதவிகிதத்தை நுண்ணுயிரிகள் அடைத்து வாழ்கின்றது. விலங்குகள் 0.04 % நிரப்பி நிற்க, மனிதப் பயன்பாட்டில் இருக்கும் பரப்பளவோ வெறும் 0.01 % தான். 

ஆச்சரியமாக இருந்தாலும் அதுதான் உண்மை. இந்த சதவிகிதக் கணக்கை வைத்துப் பார்த்தால், இந்த உலகமானது மரங்கள், செடிகள், கொடிகள் மற்றும் நுண்ணியிரிகள் வாழ மட்டுமே படைக்கப்பட்டதாக  தோன்றுகிறது.  

பார்க்கப் போனால், தேவையற்று வந்தேரிய ஒன்றாகத்தான் பல்லிளிக்கிறது இந்தப் பாழும் மனித இனம். ஆனால், அந்த 0.01 % செய்யும் அபாண்ட காரியங்கள் இருக்கிறதே, ஐயோ அதை சொல்லி மாளாது.  

******* 

ஆதிகுடிகள் இருந்த வரை காடு, காடாக இருந்தது மலை, மலையாக இருந்தது. ஆதிகுடிகள் இயற்கையை துன்புறுத்தாமல் அங்கே கிடைக்கும் தேன், கனி, கிழங்குகளை உண்டு மகிழ்ந்திருந்தனர். 

ஆனால், நாகரீகமடைந்த மனிதனுக்கு அறிவுப் பிதுக்கம் நேர்ந்தது. இயற்கையாக கெட்டிப்பட்டு பிடிமானத்தோடு இருக்கும் மலையை தன் சுயநலத்துக்காக வெட்டிப் பிளந்தான். மரங்களுக்காக வெட்டினான். கனிமங்களுக்காக வெட்டினான். அட்வென்ச்சர் செய்கிறேன் பேர்வழி என அத்து மீறினான். மொத்தத்தில் இயற்கையை வியாபாரப் பொருளாக்கப் பார்த்தான்.  

Article about Wayanad Landslide

சுயநல சுகவாசியான அவன் இந்த மலையை ஒரு காஃபி அல்லது ஒரு தேநீர் அருந்திக் கொண்டே ரசித்தால் என்ன என்று விகாரமாக யோசிக்கத் துவங்கினான். அதற்கு அந்த மலையையே பலிகடாவாக்கினான். 

ஆம், மலையெங்கிலும் காஃபி, டீ போன்ற மலைத் தோட்டப் பயிர்களை விதைத்தான். அது பணப்பயிராக மாற மாற மேலும் பேராசை கொண்டான். செயற்கையான ரசாயன உரங்களைக் கொண்டு சென்று அந்த மலையின் அங்கமெங்கும் கொட்டினான்.  

அந்த ரசாயன உரங்களின் எரிச்சலில் மலை மண்ணின் தாதுக்களும், நுண்ணுயிரிகளும் துடிதுடித்து அழிய – அதன் பிடிப்புத் தன்மை மெல்ல மெல்ல விட்டுப் போக பெய்யும் மழை மொத்தமும் அடியிலிருக்கும் தாய்மண்ணுக்குள் வேகமாகப் பாய்ந்து இளக்க, அது குழைந்து, குழைந்து, அந்த அதிகாலை நேரத்தில் சரேலென சரியத் துவங்கி, உறங்கிக் கொண்டிருந்த வயநாட்டை கபளீகரம் செய்து விட்டது.    

ஆறு லக்ஸுரி ரிசார்ட்டுகள் அழிந்து போனது. கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், பள்ளிக்கூடங்களோடு விலைமதிப்பில்லாத மனித உயிர்களும் காணாமல் போனது.    

*******   

இதுபோல் உலகமெங்கும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதர்கள் திருந்தும் வரை இப்படியான அவலங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.   

இதற்குக் காரணம் க்ளோபல் வார்மிங் (GLOBAL WARMING) என்கிறார்கள். அதுதான் காரணமென்றால், 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நார்வேயில் ஏற்பட்ட ‘ஸ்டோரெகா’ (STOREGGA SLIDE) மண் சரிவுக்கான காரணம் என்னவாக இருந்திருக்க முடியும்?   

Article about Wayanad Landslide

வரலாற்றில் பதியப்பட்ட முதல் பெரும் மண்சரிவு 1806 ஆம் ஆண்டில் ஸ்விட்ஸர்லாந்தில் ஏற்பட்ட மண்சரிவாகும் (GOLDAU LANDSLIDE). அதன் காரணமும் க்ளோபல் வார்மிங் தானா? இதற்கெல்லாம் வெளிப்படையான தரவுகளை உலக நாடுகள் முன் வைத்ததாகத் தெரியவில்லை. போகட்டும், அது குறித்துப் பேசி ஆகப் போவது ஒன்றுமில்லை.  

*******  

நாம் உடனடியாகக் கவனிக்க வேண்டியது “இன்று நம் சகோதரனுக்கு நிகழ்ந்தது நாளை நமக்கும் நிகழக் கூடும்” என்னும் எச்சரிக்கையைத்தான்.   

மேற்குத் தொடர்ச்சி மலையில் வயநாட்டுப் பகுதிக்கு இணையாக நொந்து போன மலைப்பகுதிகள் நம் தமிழ்நாட்டிலும் உண்டு என்பதை உணர்ந்தாக வேண்டும்.   

காடுகள் அழிப்பை தடுத்தாக வேண்டும். மலையின் இயற்கை குணங்களை நன்கு அறிந்த ஆதிகுடிகளை அங்கிருந்து அப்புறப்படுத்துவதை நிறுத்த வேண்டும். இயன்றால், அப்புறப்படுத்தப்பட்டவர்களை மீண்டும் அங்கே குடியமர்த்த வேண்டும்.   

தமிழகத்தில் விபத்துக்குள்ளாகக் கூடிய பகுதிகளை கண்டறிந்து அங்கே இருக்கும் மக்களை அப்புறப்படுத்தியாக வேண்டும். குடியேற்றங்களைத் தடுத்தாக வேண்டும்.    

சூழலியலில் ஆழங்காற்பட்ட பூவுலகின் நண்பர்கள் போன்ற அமைப்புகளின் துணை கொண்டு இயற்கை சீற்றங்களின் தீவிரத் தன்மையை கணித்து சீர்படுத்தியாக வேண்டும்.    

இனி வரும் மாதங்கள் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டிய காலங்கள் என்கின்றார்கள் விவரமறிந்தவர்கள். தமிழ்நாட்டு அரசாங்கம் விழிப்போடு இருந்தாக வேண்டியது அவசியமாகிறது.   

ஒருவேளை அரசாங்கம் சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமானால் அதை அரசியலாக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து வழிமொழிந்து கடைபிடிக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகிறது.   

*******  

மனிதர்களே, மனிதர்களே… இயற்கையை அளவுக்கு அதிகமாக தொந்தரவு செய்யாதீர்கள்.   

அட, இவ்வளவு பிரம்மாண்டமான மலையை நான் வெட்டும் வெறும் பத்து கன அடி தானா சரித்துவிடப் போகிறது என எண்ணி விடாதீர்கள். ஒரு சிறிய நரம்பை வெட்டி விட்டால் மொத்த சரீரமும் தொங்கிச் சரிந்து விடாதா? அளவில் சிறிதுதான் எனினும் பொம்மைகளை அகற்றினால் கோபுரம் குடை சாய்ந்து விடாதா?  

தாயின் மடியானது தலை சாய்ப்பதற்கல்லவா? அதில், தளம் போட்டுத் தங்கப் பார்ப்பது குரூர சிந்தனையல்லவா?  செய்வதையெல்லாம் செய்துவிட்டு வானத்தைப் பார்த்து அழுது பழிப்பதில் அர்த்தமுண்டா?   

கல்லூரிக் காலத்தில் எழுதிய வரிகள் நினைவிலாடுகிறது…  

பொறுமையாக இருக்கும் வரை   

மலையை போல தியானம் – அவள்  

பொங்கி எழுந்து சீறிப்புட்டா   

பூமியே மயானம் !   

இனியேனும், மனித இனம் இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தியபடி வாழப் பழகட்டும் !  

*******  

கட்டுரையாளர் குறிப்பு    

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.  

300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.  

அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மெய்மையே! தியாகமே! திருநாளே!

ரம்ஜான் புது வெண்பாக்கள்!

சென்னை : 5 ஸ்டார் ஹோட்டல்களின் பார் உரிமம் ரத்து!

நிலா விலகுது… நேரம் கூடுது: அப்டேட் குமாரு

‛மழை பிடிக்காத மனிதன்’… விஜய் மில்டன் ஷாக் தகவல் : அது எப்படி நடக்கும்?

காங்கிரஸ் வேறு கூட்டணிக்கு செல்கிறதா?: செல்வப்பெருந்தகை பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share