உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பரந்த அளவில் பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதின் இன்று (நவம்பர் 19) ஒப்புதல் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவிற்கும் அதன் அண்டை நாடான உக்ரைனுக்கும் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்கா, சமீபத்தில் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதி வழங்கியது. மேலும் அதற்கு தேவையான ஏவுகணைகளை வழங்கவும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் முடிவு செய்தார்.
நேட்டோவில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, உக்ரைனுக்கு வழங்கிய இந்த அனுமதி ரஷ்யாவிற்கு எதிரான முடிவாக கருதப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய ரஷ்ய அதிபர் புதின், ”ஏவுகணைகளுக்கு அனுமதி அளித்தது அமெரிக்காவின் ஆபத்தான முடிவு. உக்ரைன் போர் உலகப் போருக்கு வழிவகுக்கும்” என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து உக்ரைனின் சபோரிஜியா பிராந்தியத்தின் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் ஆளுநரான யெவ்ஜெனி பாலிட்ஸ்கியை, ரஷ்ய அதிபர் புதின் நேற்று மாஸ்கோவில் உள்ள கிரெம்ளினில் சந்தித்தார்.
அதன் தொடர்ச்சியாக, உக்ரைனின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலுக்கு ஆளானால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று புதுப்பிக்கப்பட்ட அணுக் கொள்கைக்கு புதின் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
அணு ஆயுதங்களை பயன்படுத்த வல்லரசு நாடுகளான அமெரிக்காவும், ரஷ்யாவும் எதிரெதிர் துருவமாக நிற்பது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
‘அமரன் ‘ முகுந்தின் கடைசி 15 நிமிடங்கள்… உண்மையை சொன்ன நண்பர்!
பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடை!