நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் கொண்ட கொலிஜியம் முறையை மாற்றுவதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை தேர்வு செய்யும் அதிகாரம் கொலிஜியம் குழுவிற்குத்தான் உண்டு.
கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் யார் பெயரை பரிந்துரைக்கிறார்களோ, அவர்களைத்தான் மத்திய அரசு நியமிக்க முடியும்.
கொலிஜியத்தின் பரிந்துரையை நிராகரிக்கும் அதிகாரம் கொண்ட மத்திய அரசுக்கு, புதிய நீதிபதிகளை தேர்வு செய்யும் உரிமையில்லை.
எனவே புதிய நீதிபதிகளை நியமிப்பதில் நீதித் துறைக்கும் அரசுக்கும் சம அளவிலான முக்கியத்துவம் இருக்கும்படி,
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் இந்த ஆணையத்தை கடந்த 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, கொலீஜியம் முறைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
கொலீஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள், தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக பரிந்துரைப்பதாகவும், தங்களுக்குத் தெரிந்த நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளிக்க பரிந்துரைப்பதாகவும் விமர்சித்து வருகிறார்.
தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே இந்த பரிந்துரைகள் இருப்பதில்லை என்றும் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டினார். மேலும் நீதித்துறையில் மறைமுகமாக தீவிரமான அரசியல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் அரசுதான் நீதிபதிகளை நியமிக்கிறது என்றும், இந்தியாவில் மட்டும்தான் நீதிபதிகளே, நீதிபதிகளை நியமித்துக்கொள்கிறார்கள் என கிரண் ரிஜிஜு விமர்சித்தார்.
கொலிஜியம் முறை தனக்கு ஏற்புடையது அல்ல என்றும் இந்த முறையை மாற்ற வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது என்ற செய்தியை கிரண் ரிஜிஜு அழுத்தமாக பதிவு செய்து வருகிறார்.
இதையடுத்து, கொலிஜியம் நடைமுறை குறித்து மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் முன்வந்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக அண்மையில் பொறுப்பேற்ற சந்திரசூட், கொலிஜியத்திற்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கலை.ரா
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு ரத்து!
காசி தமிழ்ச் சங்கமம்: தமிழகத்திலிருந்து புறப்பட்ட முதல் ரயில்!