ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரானில் 9 வயது சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயம். இந்த சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
நம் நாட்டில் பாதுகாப்புக்காக போலீசார் ரோந்து வருவது போல ஈரானில் பெண்களின் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க காஸ்த் எர்ஷாத் என்ற சிறப்பு பிரிவு போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர்.
அப்படி கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு 22 வயது இளம்பெண் மாஷா அமினி சென்றார்.
அவரை வழிமறித்த போலீசார் ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி கைது செய்திருக்கின்றனர். அதோடு காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று தாக்கியதால் அவர் தலையில் காயமடைந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் வெடித்தது. “பெண், வாழ்க்கை, சுதந்திரம்” என்று முழக்கமிட்டபடி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஹிஜாப்பை கழற்றி தூக்கி எறிந்ததோடு தலைமுடியை வெட்டியும் மத தலைவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதுபோன்று உயிரிழந்த மாஷா கமினிக்கு நீதிக்கேட்டு பதாகைகளையும் ஏந்தி கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்துக்கு தொழிலாளர்கள், வணிகர்கள், திரைபிரபலங்கள் என பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
முடியை வெட்டி அனுப்பிய இயக்குநர்

கடந்த டிசம்பர் 9ஆம் தேதி கேரளாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிற்கு இரானிய இயக்குநர் மஹ்னாஸ் மகாமதி தனது முடியை வெட்டி அனுப்பி வைத்தார். அதனை திரைப்பட விழாவில் அவருக்கான விருதை பெற்ற கிரேக்க இயக்குநர் அதீனா ரேச்சல் சங்கரி பார்வையாளர்களிடம் காண்பித்தார்.
இதுகுறித்து மஹ்னாஸ் மகாமதி “ஈரானில் பெண்கள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் எதிர்கொள்ளும் சோகத்தை வெளிப்படுத்தவே முடியை வெட்டி அனுப்பினேன்” என ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

மஹ்னாஸ் மகாமதி போன்று ஈரானில் பிரபல திரைப்பட நடிகையான தாரனே அலிதூஸ்டி எதிர்ப்புத் தெரிவித்தார். அதோடு போராட்டத்தில் ஈடுபடுபவர்களைத் தூக்கிலிடுவதற்கும் தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அந்த பதிவில், “இந்த ரத்தகளரியை பார்த்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஒவ்வொரு சர்வதேச அமைப்பும் மனிதக்குலத்திற்கு அவமானம்” என்று பதிவிட்டிருந்தார். ஹிஜாப் அணியாத புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.
இப்படி பதிவிட்டதற்கு உரிய ஆவணத்தைச் சமர்ப்பிக்குமாறு ஈரான் நாட்டு அரசு ஊடகமான ஐஆர்என்ஏ கூறியிருந்தது.
ஆனால் உரிய ஆதாரம் எதையும் சமர்ப்பிக்காததால் அவர் டிசம்பர் 18ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரான் போலீசார் கூறுகின்றனர். தாரனே அலிதூஸ்டி தவறான தகவல்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
யார் இவர் தாரனே அலிதூஸ்டி?

தெஹ்ரானில் 1984ல் பிறந்த இவர் 2002ஆம் ஆண்டு, நான் தரனே படம் மூலம் திரையில் அறிமுகமானார். 38 வயதான இவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் 2016ஆம் ஆண்டு வெளியான தி சேல்ஸ்மேன் படம்தான் இவரை உலகறிய செய்தது. இந்த படம் அமெரிக்காவில் நடைபெற்ற 89ஆவது திரைப்படவிழாவில் சிறந்த வெளிநாட்டு மொழிக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது.
ஈரானின் சினிமா துறையில் மீடூ இயக்கத்தை ஆதரித்ததற்காகவும் நன்கு அறியப்பட்டவர் தாரனே. அபௌட் எல்லி’ மற்றும் ‘லீலா’ஸ் பிரதர்ஸ்’ போன்ற விருது பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகை என 6 விருதுகளைப் பெற்றுள்ளார். ஒரு பெண்ணியவாதி மட்டுமின்றி ஈரான் அரசுக்கு எதிராகப் போராடும் நடிகர்களில் ஒருவரும் ஆவார்.
கடந்த 26 ஜனவரி 2017 அன்று, அப்போதைய அமெரிக்க அதிபரான ட்ரம்ப் ஈரானியர்கள் மீது கடுமையான விசா பயணக் கட்டுப்பாடுகளை விதித்த போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆஸ்கரை பெற்ற தி சேல்ஸ்மேன் பட விருதை புறக்கணிப்பதாக அறிவித்தார்.
இவரது தந்தை ஈரான் கால்பந்து விளையாட்டு வீரராக இருந்த ஹமித் அலிதுஸ்டி ஆவார். தாரனே 2011 – 2016 வரை அலி மன்சூரி என்பவருடன் திருமண உறவில் இருந்தார். அதன்பின் இருவரும் விவாகரத்து பெற்றனர். தற்போது தாரேனாவுக்கு ஒரு மகள் உள்ளார்.

இன்ஸ்டாவில் தாரனேவை 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இதில் தாரனேவின் அரசுக்கு எதிரான பதிவை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
வரலாறாக தொடரும் போராட்டம்

ஈரானில் இதுபோன்று அரசுக்கு எதிராகப் போராட்டம் வெடிப்பது முதன்முறையல்ல.
2009ல் ஜனாதிபதி தேர்தல் முடிவு விவகாரத்தில் போராட்டம் வெடித்தது. 2017-18ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார நிலை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை வீதியில் இறங்கிப் போராட வைத்தது. 2019ல் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் 2 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தற்போது நடக்கும் போராட்டத்துக்கு ஹிஜாப் மட்டும் காரணமல்ல நாட்டின் பொருளாதார நிலையும் தான் என கூறப்படுகிறது.
இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டதாக ஈரானில் 500க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 20,000க்கு அதிகமானோர் கைதாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் 1979ஆம் ஆண்டு இஸ்லாமிய குடியரசு அமைந்த பிறகு, அரசுக்கு ஏற்பட்டுள்ள சவாலாக இந்த ஹிஜாப் போராட்டம் பார்க்கப்படுகிறது. அதேசமயத்தில் ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில், பெண்களின் நிலை குறித்த ஐ.நா ஆணையத்திலிருந்து ஈரானை வெளியேற்ற வாக்களித்தது. இதற்கான வாக்கெடுப்பில் இந்தியா உள்பட மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கவில்லை.
இந்தசூழலில், ஈரான் அரசோ, போராட்டக்காரர்களை வெளிநாட்டு ஆதரவுடன் ஆயுதங்களைப் பயன்படுத்தும் பயங்கரவாதிகள் என கூறியுள்ளது.
பிரியா
இந்திய- சீன எல்லை மோதல் விவகாரத்தால் அமளி: எதிர்கட்சிகள் வெளிநடப்பு!
முன்னாள் மாணவர்களிடம் நிதி கேட்கும் முதல்வர்: நம்ம ஸ்கூல் திட்டம் தொடக்கம்!