உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 543ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஏழு பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 2022 பிப்ரவரி மாதம் 22 அன்று, சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது.
இதை கடுமையாக எதிர்த்து, ஆக்கிரமிப்புக்கு பணிய மறுத்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளுதவியுடனும், ராணுவ உதவியுடனும் உக்ரைன், ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வருகிறது.
இந்தப் போரில் இரு நாடுகளிலும் கடும் உயிர்ச்சேதங்களும், கட்டட சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. போர் 18 மாதங்களுக்கு மேலாக 543 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் கடல் டிரோன்கள் மூலம் பரஸ்பரம் தாக்கி வருகின்றன.
இந்த நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நேற்று முன்தினம் அதிகாலை டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோனை மாஸ்கோவில் நிறுவப்பட்டுள்ள வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது.
ஆனாலும், டிரோன் மாஸ்கோவில் உள்ள வர்த்தக மையம் மீது மோதியது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ரஷ்யா தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று உக்ரைன் மீது ரஷ்யா ஓர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் தலைநகர் கீவிற்கு வடக்கில் 145 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செர்னிஹிவ் நகரம்.
இந்த நகரம் இரு பக்கமும் அழகான மரங்கள் நிறைந்த சாலைகளுக்கும், நூற்றாண்டு கால பழமையான தேவாலயங்கள் புகழ் பெற்றது. இந்த நகரின் மத்தியில் உள்ள ஒரு சதுக்கத்தின் அருகே ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இதில், மத விடுமுறையைக் கொண்டாட அந்தப் பகுதியில் உள்ள ஒரு சர்ச்சுக்குச் சென்று கொண்டிருந்தவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்களில் ஆறு வயது குழந்தை ஒன்றும் அடங்கும். 90 பேர் காயமடைந்துள்ளனர். அவற்றில் 12 பேர் குழந்தைகள் மற்றும் 10 பேர் காவல் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
“ரஷ்யாவின் தாக்குதலில் அந்த நகரின் சதுக்கம், ஒரு பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் மற்றும் கலையரங்கம் ஆகியவை சேதமடைந்துள்ளன” என சுவீடன் நாட்டுக்குச் சென்றிருக்கும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.
இந்தப் போரினால் உலகளாவிய பொருளாதாரமும், உணவு தானிய விநியோகமும் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் போர் விரைவில் முடிவுக்கு வந்து அமைதி திரும்ப வேண்டும் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ராஜ்
ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே விரைவில் படகு சேவை: அமைச்சர் எ.வ.வேலு
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!