இந்திய வானிலை ஆராய்ச்சிக்கு சிறப்பாக பங்காற்றியவரும், இயற்பியலாளருமான அன்னா மணி பிறந்த நாளை முன்னிட்டு, இன்று ஆகஸ்ட் 23-ம் தேதி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் வெளியிட்டுள்ளது.
அன்னா மணி 1918-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி, கேரளாவில் உள்ள திருவாங்கூரில் பிறந்தவர்.
அவருக்கு இன்று 104-வது பிறந்த நாள். இவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டு அவரை கெளரவித்துள்ளது.
மிகச்சிறந்த பெண் அறிவியல் அறிஞர்களில் ஒருவரான இவர், இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு ஆற்றிய பங்களிப்பின் காரணமாக இன்று நாம் துல்லியமாக வானிலையை அறிந்து கொள்ள முடிகிறது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “104-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்னா மணி.
உங்களது வாழ்க்கையின் பணி, இந்த உலகத்திற்கு வெளிச்சமான நாட்களைத் தந்திருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.

இவர் இந்தியாவின் வானிலை பெண்மணி என்று அழைக்கப்படுகிறார். கேரள மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை, சென்னையில் உள்ள பிரெசிடன்சி கல்லூரியில் பயின்றுள்ளார்.
1948-ஆம் ஆண்டு இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பணியில் சேர்ந்தார். இந்திய வானிலை ஆய்வு மையம் தனது சொந்த வானிலைக் கருவியை வடிவமைக்க அவர் உதவினார்.
1953-ம் ஆண்டு அவரது தலைமையின் கீழ் இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு, 100-க்கும் மேற்பட்ட வானிலைக் கருவிகளின் செயல்பாடுகள் எளிமைப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டன.
அன்னா மணி இந்திய வானிலை ஆய்வுத் துறையின் துணை இயக்குனராக இருந்துள்ளார். மேலும், ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். இவர் 16 ஆகஸ்ட் 2001-ம் ஆண்டு காலமானார்.
செல்வம்
சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் வெப்ப அலை ஏன் அதிகரித்திருக்கிறது?