அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு அவரே காரணம் என இன்று (மார்ச் 22) சமூக செயற்பாட்டாளரும் கெஜ்ரிவாலின் முன்னாள் குருவுமான அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பி இருந்தது.
ஆனால், அவர் எதற்கும் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை மீது அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தலாம் எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், நேற்றிரவு அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாகப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே, “என்னுடன் இணைந்து மதுவிற்கு எதிராகக் குரல் எழுப்பிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் மதுக் கொள்கைகளை வகுத்துக் கொண்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரின் கைதுக்கு அவரே காரணம்” என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாகக் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, “ஊடகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றுவது, கட்சிகளை உடைப்பது, நிறுவனங்களிடம் நிதியை பறிப்பது, எதிர்க்கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குவது போன்றவை ஒன்றிய அரசுக்கு போதவில்லை.
இப்போது மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
பயந்த சர்வாதிகாரி, இறந்த ஜனநாயகத்தை உருவாக்க விரும்புகிறார். இதற்கு ‘இந்தியா’ தக்க பதிலடி கொடுக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “டெல்லியில் ஜனநாயகத்தின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.” என அரவிந்த் கெஜ்ரிவால் கைதிற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “அரவிந்த் கெஜ்ரிவாலைக் கைது செய்ததன் வாயிலாக பாஜக தங்களை அம்பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் டெல்லியில் தொகுதி உடன்பாடு செய்திருப்பது பாஜகவிற்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் விளைவாகத்தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், மம்தா பானர்ஜி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்களும் அரவிந்த் கெஜ்ரிவால் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் பத்திரங்கள்: பாஜகவிற்கு அதிக நிதி கொடுத்த நிறுவனங்கள் இவைதான்!
அமலாக்கத்துறை கைது : உச்சநீதிமன்றத்தில் மனுவை வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்
கோமாவில் இருந்தவர் தெளிச்சிடுச்சா…?