லட்டுவில் கலப்படம்: திருப்பதி கோயிலில் மகா சாந்தி யாகம்!

Published On:

| By Kavi

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 23) கோயிலில் மகா சாந்தி யாகம் நடத்தப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சிக்காலத்தில் திருப்பதியில் லட்டுவில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.

நாடு முழுவதும் இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை கோரி மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம் குறித்து சட்டப்பேரவையிலும் அமைச்சரவையிலும் விவாதிக்கப்பட வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

லட்டுவில் கலப்படம் நடந்ததற்கு ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டு 11 நாட்கள் தீட்சை விரதம் தொடங்கி இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

சந்திரபாபு நாயுடு கூறுகையில்’ “லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதால் அந்த தோஷத்தை போக்க பரிகாரம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. செப்டம்பர் 23ஆம் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயிலின் தங்க கிணறு அருகே உள்ள மண்டபத்தில் சிறப்பு தோஷ நிவர்த்தி சாந்தி யாகம் நடத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, கோயிலை சுத்தப்படுத்தும் நோக்கில் மகா சாந்தி யாகம் இன்று நடத்தப்பட்டது.

லட்டு தயாரிக்கும் சமையலறை மற்றும் அன்னதானம் செய்யும் அறைகளில் கோமியம் கலந்த பஞ்சகாவ்யத்தை கொண்டு தூய்மை செய்யப்பட்டது. இதில் எட்டு அர்ச்சகர்கள், மூன்று ஆகம ஆலோசகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷ்யாமளா ராவ் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது குங்கிலிய புகையும் காட்டப்பட்டது. குங்கிலிய மரத்தில் இருந்து எடுக்கப்படும் பிசின் போன்ற ஒரு பொருள் குங்கிலியம்.

இதை நெருப்பில் போட்டு காட்டும்போது விஷக்காற்று மற்றும் தோஷங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

பிரியா

“சிறார் ஆபாசப்படம் பார்ப்பது குற்றம்”: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!

பில் – வெப்சீரிஸ் விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment