கும்பமேளா: ஜன்னல்களை உடைத்து ஏசி பெட்டிகளில் நுழைந்த பயணிகள்!

Published On:

| By Raj

கும்பமேளாவுக்கு வந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புபவர்களுக்கு ரயிலில் இடம் கிடைக்காததால் ஏசி பெட்டிகளின் ஜன்னல்களை உடைத்து அதன் வழியாக ஏசி வகுப்பு பெட்டிகளுக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மாபெரும் மதம் சார்ந்த ஒன்றுகூடலான கும்பமேளா தற்போது நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து கொண்டிருப்பதால் பிரயாக்ராஜ் நகரம் திணறிக்கொண்டிருக்கிறது.

தற்போதுவரை கும்பமேளா நிகழ்விற்கு சுமார் 43 கோடி பேர் வந்திருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், இவ்வளவு பேரின் வருகையைச் சமாளிக்க முடியாமல் பிரயாக்ராஜ் நகரம் திணறுகிறது. Angry Devotees Break AC Coach Glasses

திரிவேணி சங்கமத்திலிருந்து சுமார் ஏழு – எட்டு கி.மீ. தூரத்திற்கு வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். நீராடிவிட்டு வரும் பக்தர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்குச் செல்வதற்கோ, ரயில் நிலையத்தை அடைவதற்கோ வாகனங்கள் ஏதும் கிடைக்காமல் அலைபாயும் நிலை நீடிக்கிறது.

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் லட்சக்கணக்கான பக்தர்களில் ஒருபகுதியினர் தங்கள் சொந்த வாகனங்களிலும் பிறர் பொது போக்குவரத்து சேவையையும் சார்ந்துள்ளனர். அப்படியிருக்கையில், பிரயாக்ராஜுக்கு போதிய எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படாததால் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் பலருக்கு ரயில்களில் இடம் கிடைக்காததால் அவர்கள் இன்ஜின் மீது ஏறிச் செல்ல முற்பட்டதையும் காண முடிகிறது.

இந்த நிலையில், பீகார் மாநிலம் மதுபானி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த, ஜெயா நகரிலிருந்து பிரயாக்ராஜ் வழியாக புது தில்லிக்கு செல்லும் சுவதந்திரதா சேனானி எக்ஸ்பிரஸ் (12561) ரயிலில் இடம்பிடிக்க பயணிகள் போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்தனர்.

இதன் காரணமாக நெரிசலும் தள்ளுமுள்ளும் உண்டானது. ரயிலில் இடம் கிடைக்காத விரக்தியில் பயணிகள் சிலர், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். அதன் வழியாக ஏசி வகுப்பு பெட்டிகளுக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. எனினும், சம்பவ இடத்துக்கு ரயில்வே பாதுகாப்புப் படை(ஆர்பிஎஃப்) காவலர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. Angry Devotees Break AC Coach Glasses

ரயில் மீது கற்களை வீசி எறிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த ரயில், உடைந்த ஜன்னல் கண்ணாடிகளுடனே இயக்கப்பட்டதால், சமஸ்திபூர் ரயில் நிலையத்தை ரயில் சென்றடைந்ததும் பயணிகள் சிலர் இந்த ஜன்னல்கள் வழியாக மீண்டும் ஏசி வகுப்பு பெட்டிகளுக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share