andhra telangana floods

ஆந்திரா, தெலங்கானாவை புரட்டி போட்ட வெள்ளம்… தவிக்கும் மக்கள்!

இந்தியா

தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நேற்று (ஆகஸ்ட் 31) இரவு முதல் பலத்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

ஆகஸ்ட் 30-ஆம் தேதி வங்கக்கடலின் மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை காற்றழுத்த மையமாகி உருமாறியது. இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கலிங்கப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது.

இதனால் நேற்று இரவு முதல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

தெலங்கானா

இதன் காரணமாக தெலங்கானாவில் உள்ள அடிலாபாத், நிசாம்பாத், ராஜன்னா, விக்ராபாத், சங்காரெட்டி போன்ற மாவட்டங்களுக்கு ரெட்  அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ஒஸ்மான் சாகர், ஹிமாயத் சாகர் ஏரிகள் நிரம்பிவிட்டன. ஹுசைன் சாகர் ஏரி நிரம்பி வழிந்ததால், அதன் மதகுகள் திறந்துவிடப்பட்டன.

கம்மம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 52.1 செ.மீ-க்கு மழை பெய்ததின் விளைவாகக் கம்மம் – வாரங்கள் ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏறத்தாழ 99 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வருவாய்த் துறை, நீர்ப்பாசனத்துறை மற்றும் மற்ற துறைகளின் அதிகாரிகளை நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளத்தால் மஹபூபாபாதில் ஒரு பெண் மரணமடைந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கம்மம் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்கள்.

இதற்கிடையில் மத்திய உள்துறை துணை அமைச்சர் பந்தி சஞ்சய் குமார் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் “தெலங்கானா வெள்ளப் பாதிப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினேன். அவரின் உத்தரவின்  பேரில் ஒன்பது தேசிய பேரிடர் குழுக்கள் தெலங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.

ஆந்திர பிரதேசம்

பலத்த மழையின் காரணமாக விஜயவாடா மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர். குண்டூர் மாவட்டத்தில் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒரு ஆசிரியரும் இரு மாணவர்களும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர்.

விஜயாவாடா, மச்சிலிபட்னம், குடிவாடா, மங்களகிரி போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு நிவாரண பணிகளுக்காக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.3 கோடி விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.

இதற்கிடையில், கோதாவரி அற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும் நிலையில் மற்ற ஆறுகளிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடும் என்று மத்திய நீர்வளத்துறை ஆணையம் எச்சரித்துள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

“தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி இல்லை” – சீமான் அதிரடி!

ஹேமா கமிட்டி குறித்து எனக்கு எதுவும் தெரியாது… நழுவிய ரஜினி

டிஜிட்டல் திண்ணை: துரைமுருகன் திடீர் சிங்கப்பூர் பயணம்- பின்னணி என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1