தெலங்கானா மற்றும் ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தெலங்கானா மற்றும் ஆந்திராவில் ஆகஸ்ட் 31 இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தெலங்கானாவின் பல மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு அபாய எச்சரிக்கை நேற்று(செப்டம்பர் 1) விடுத்திருந்தது.
கம்மம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 52.1 செ.மீ அளவு மழை பெய்ததில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நேற்று பலியானார்கள்.கம்மம் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பலைர் நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.
வெள்ளம் காரணமாகப் பாதிப்பிற்குள்ளாகியிருந்த கேசமுத்திரம்-மஹபூபாபாத் இடையிலான ரயில் வழித்தடத்தை ரயில்வே துறையினர் சரிசெய்து வருகின்றனர். இந்த பணி நாளை மாலை முடிவடையும் என்று சொல்லப் படுகிறது.
இதுவரை 9 நபர்கள் இறந்துள்ளதாக தெலங்கானா வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலெடி ஸ்ரீனிவாச ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் வெள்ள நிவாரண பணிகளைக் கண்காணித்து வரும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி , இன்று கம்மம் மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளார்.
கம்மம், பத்ரத்ரி கோதுகுடெம் மற்றும் மஹபூபாபாத் ஆகிய மாவட்டங்களுக்கு ரூ.5 கோடி தெலங்கானா அரசு விடுவித்துள்ளது. கூடுதலாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால், கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல பல்கலைக்கழகங்கள் தேர்வுகளைத் தள்ளி வைத்துள்ளன.
இதற்கிடையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விஜயவாடா மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்குப் படகில் சென்று நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்கள் பதட்டம் அடைய வேண்டாம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு நிவாரண பணிகளுக்காக, ஆந்திராவிற்கு 40 விரைவுப் படகுகள் மற்றும் 6 ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்துள்ளது.
ஆந்திராவில் இதுவரை 12 நபர்கள் பலியாகியுள்ளார்கள். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவைத் தொலைபேசியில் அழைத்து மத்திய அரசாங்கம் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள இரு மாநிலங்களுக்கும் எல்லா விதமான உதவியும் செய்து தரும் என்று முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மத்திய தகவல் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சந்திரசேகர் குண்டூர் சட்டமன்ற உறுப்பினர் நசீர் அஹ்மதுடன் குண்டூரில் வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங்களைப் பார்வையிட்டார்.
மழை காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் இருந்த பயணிகள், பேருந்துகள் மூலமாக விஜயவாடாவிற்கு இன்று அதிகாலை அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அதிரடியாக குறைந்த தங்கம் விலை: சவரன் எவ்வளவு தெரியுமா?
கோட்… டிக்கெட் விலை 500 முதல் 1000 ரூபாயா?
ஃபார்முலா கார் பந்தயம் வெற்றி : அமெரிக்காவில் இருந்து பாராட்டிய ஸ்டாலின்