பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மூன்றும் விபத்துக்குள்ளானதில் 150 க்கும் மேற்பட்ட பயணிகள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஆந்திர மாநிலம் விஜயவாடா முதுநிலை கோட்ட வணிக மேலாளர் (சீனியர் டிசிஎம்), வி.ராம்பாபு கூறுகையில்,
“ விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, தாடேபள்ளிகுடம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், திருப்பதி, விசாகப்பட்டினம் ஆகிய பகுதியை சேர்ந்த 150 பயணிகள் , பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணித்துள்ளனர்.
இந்த இரண்டு ரயில்களிலும் பயணம் செய்த ஆந்திர பயணிகளின் விவரங்களை நாங்கள் சேகரித்துள்ளோம்.
அவர்களில் பாதிக்கப்பட்ட பயணிகளின் நிலை என்ன என்பதை கண்டறிவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
தெற்கு ரயில்வே கூறுகையில், “ஆந்திரா மாநிலம் முழுவதும் உள்ள பல ரயில் நிலையங்களின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இந்நிலையில், பாலசோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட தொழில் நுட்பத்துறை அமைச்சர் மற்றும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
முன்பதிவில்லா பெட்டிகளில் பயணித்தவர்கள் எத்தனை பேர்? அச்சமூட்டும் உயிரிழப்பு எண்ணிக்கை!