குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஏற்படும் சொத்து தகராறுகள் அடிதடியில் ஆரம்பித்து காவல் நிலையம் வரை செல்லும்.
நீதிமன்றங்களுக்கு செல்லும் சொத்து தகராறுகளும் உண்டு. இந்த நிலையில், சொத்து பிரச்சினையால் தொழிலதிபர் தாத்தாவை 73 முறை பேரன் குத்திக்கொன்ற சம்பவம் ஆந்திரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜனார்தன் ராவ். அவர் சமீபத்தில் தனது மூத்த மகளின் மகன் ஸ்ரீ கிருஷ்ணாவை தன்னுடைய குழுமத்தின் இயக்குநராக நியமித்து, இரண்டாவது மகள் சரோஜினி தேவியின் மகன் தேஜாவுக்கு ரூ.4 கோடி மதிப்புள்ள பங்குகளை மாற்றியுள்ளார்.
இதுதொடர்பாக சரோஜினி தேவியும் அவரது மகன் தேஜாவும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஜனார்த்தன் ராவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். சொத்துப் பங்கீடு தொடர்பாக ஜனார்தன் ராவுக்கும், தேஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. Andhra Industrialist stabbed by Grandson
தனது தாத்தா அநியாயமாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டிய தேஜா, ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்து தாத்தாவை 73 முறை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டீ கொண்டு வர சமையலறைக்குள் சென்ற சரோஜினி தேவி, சத்தம் கேட்டு திரும்பி வந்து அதைத் தடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், தன் தாயாரையும் தேஜா கத்தியால் தாக்கியதால் அவருக்கும் கத்திக்குத்துகள் விழுந்துள்ளன. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பாதுகாவலரையும் தேஜா மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து பஞ்சாகுட்டா போலீஸார் பிப்ரவரி 8-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். முதுகலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய தேஜாவை அவர்கள் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் போதைப்பொருளுக்கு அடிமையாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தேஜாவின் தாயார் சரோஜினி தேவி மருத்துவமனை தீவிர சிகிச்சையில் உள்ளார்.