ஒரு பக்கம் குஜராத் மாநில சட்டப் பேரவை தேர்தல், இன்னொரு பக்கம் ஹிமாச்சல் பிரதேச சட்டப் பேரவை தேர்தல் என பிரதமர் தொடங்கி அமைச்சர்கள் வரை பா.ஜ.க. நிர்வாகிகள் அனைவரும் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் தனது பரபரப்பான பணிகளுக்கு மத்தியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 72 நாட்களில் மூன்றாவது முறையாக பீகாருக்கு பயணம் செய்திருப்பது தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடந்த போது உடல்நிலையைக் காரணம் காட்டி பிரச்சாரத்தை கூட புறக்கணித்த அமித்ஷா தற்போது காரணமே இல்லாமல் பீகாருக்கு அடிக்கடி செல்வது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேசம் தொடங்கி கர்நாடகா வரை அந்தந்த மாநிலங்களில் கட்சியின் முகமாக தனக்கென தனி தலைவர்களை பா.ஜ.க. உருவாக்கியுள்ளது. ஆனால், பீகாரைப் பொறுத்தவரை பா.ஜ.க.முகம் என யாரும் இல்லாத நிலையே நீடிக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தோடு நீண்ட கால தொடர்புடைய சுஷில் மோடி தான் பீகாரில் பா.ஜ.க.வின் முகமாக அறியப்பட்டார்.
ஆனால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒரு பிரைம் மினிஸ்டர் மெட்டீரியல் என அவர் பேசிய பேச்சு பா.ஜ.க. தலைமை அவரை ஓரம் கட்ட காரணமாக அமைந்தது.
நந்த் கிஷோர் யாதவ் மற்றும் பிரேம் குமார் என பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் பா.ஜ.க.வின் முகங்களாக முன்னிறுத்தப்படலாம் என கணித்த நிலையில், கட்சி நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஓரங்கட்டப்பட்ட சுஷில் மோடியின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது.
இதனால் அவர்களையும் தலைவர் பதவியில் முன்னிறுத்த பா.ஜ.க. தயங்குகிறது.
பீகார் பா.ஜ.க. தலைவர் சஞ்சை ஜெய்ஸ்வால், துணை முதல்வர்களாக இருந்த ரேனு தேவி, தர்கிஷோர் பிரசாத் ஆகியோருக்கு போதுமான அனுபவமும் திறமையும் இல்லை என பா.ஜ.க. கருதுவதாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்திலும் இதே நிலை நீடிப்பதால் தான் அங்கு மம்தா பானர்ஜிக்கு எதிராக எவ்வளவு முயற்சி செய்தும் பா.ஜ.க.வால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தேசிய அரசியலில் குஜராத்தின் முகமாக பிரதமர் மோடி இருந்தாலும் மாநில அரசியலில் அவருடைய இடத்தை நிரப்ப தற்போது வரை யாரும் இல்லை.
இதனால் தான் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-ல் நடந்த தேர்தலில் 100 தொகுதிகளுக்கும் குறைவான இடங்களில் மட்டுமே பா.ஜ.க.வால் வெற்றி பெற முடிந்தது.
உத்தராகண்ட், ஹிமாச்சல் பிரதேசம், திரிபுரா மாநிலங்களில் பா.ஜ.க.வின் அடையாளமாக யாரும் இல்லாத போதும் அந்த மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.
ஆனாலும் இந்த சிறிய மாநிலங்களை பீகாருடன் ஒப்பிட்டு தவறு செய்ய பா.ஜ.க. விரும்பவில்லை என்பது தெரியவருகிறது.
ஏற்கனவே கூட்டணியை முறித்துவிட்டு நிதிஷ் குமார் வெளியேறிவிட்ட நிலையில் அங்கு கட்சியை பலப்படுத்த வேண்டிய கூடுதல் பொறுப்பு பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.
அடுத்த தேர்தலில் நிதிஷ் குமாரை வீட்டுக்கு அனுப்ப நல்லதொரு தலைவரை தேடி தான் அமித்ஷா அடிக்கடி பீகாருக்கு செல்வதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அப்துல் ராஃபிக்
ஹிஜாப் வழக்கு: இருவேறு தீர்ப்பு!- அடுத்து என்ன?
நயன் – விக்கி குழந்தை விவகாரம்: மருத்துவமனையை கண்டறிந்தது சுகாதாரத் துறை!