ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன், மருத்துவம் மற்றும் வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கடந்த 2ஆம் தேதி ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் 278 பேரின் உயிரை பலிவாங்கிய ரயில் விபத்து உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த தொழிலதிபர் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை தரும் வகையில் 10 அம்ச நிவாரண நடவடிக்கைகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி,
1.இந்த மோசமான ரயில் விபத்தினைத் தொடர்ந்து அங்கு பணியாற்றி வரும் ஆம்புலன்ஸ்களுக்கு இலவச எரிபொருள் வழங்கப்படும்.
2.ரிலையன்ஸ் ஸ்டோர்கள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு மாவு, சர்க்கரை, பருப்பு, அரிசி, உப்பு மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட இலவச ரேஷன் பொருட்களை வழங்கப்படும்.
3.காயமடைந்தவர்களுக்கு இலவச மருந்துகளும், விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படும்.
4.இந்த கோர நிகழ்விலிருந்து மீண்டு வர உளவியல் ஆலோசனை சேவைகள் வழங்கப்படும்.
5. உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினருக்கு ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் மூலம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.
6. கை,கால்களை இழந்தவர்களுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் செயற்கை உறுப்புகள் பொருத்த உதவி செய்யப்படும்.
7. புதிய வேலை வாய்ப்புகளை கண்டறிய பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
8. ஒரே வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினரை இழந்த பெண்களுக்கு நுண்கடன் மற்றும் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படும்.
9. விபத்தால் பாதிக்கப்பட்ட கிராமப்புற குடும்பங்களுக்கு மாற்று வாழ்வாதார உதவிக்காக பசு, எருமை, ஆடு மற்றும் கோழி போன்ற கால்நடைகள் வழங்கப்படும்.
10. இறந்தவர்களின் குடும்ப உறுப்பினருக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் உருவாக்கும் வகையில் ஒரு வருடத்திற்கு இலவச மொபைல் இணைப்பு வழங்கப்படும்.
இந்த உதவிகளை பாலசோர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகியவற்றுடன் இணைந்து ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சிறப்பு பேரிடர் மேலாண்மைக் குழுவின் குழு அவசரநிலைப் பிரிவு மேற்கொள்ளும்.
இதுமட்டுமின்றி விபத்து நடைபெற்ற சிலமணி நேரத்தில் இருந்தே, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சிறப்பு பேரிடர் மேலாண்மைக் குழு பாலசோரில் களமிறங்கியது.
அவர்கள், ரயில் பெட்டிகளில் இருந்து பயணிகளை விரைவாக வெளியேற்றவும், காயமடைந்தவர்களை அவசர வாகனங்களுக்கு விரைந்து அழைத்து செல்லவும் உதவினர்.
மேலும், முகமூடிகள், கையுறைகள், பெட்ஷீட்கள், விளக்குகள் மற்றும் எரிவாயு கட்டர்களையும் போதுமான அளவில் கிடைக்க உதவி செய்தனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச பள்ளிக் கல்வியை வழங்குவதாக தொழிலதிபர் கவுதம் அதானி அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நாட்டின் மற்றொரு பிரபல தொழிலபதிரான அம்பானியும் இறங்கியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஒடிசா ரயில் விபத்தின் பின்னணி: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கம் கண்டெடுப்பு!