காசாவில் பாலஸ்தீனர்களின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, “ஆல் ஐஸ் ஆன் ரபா” என்ற போஸ்டர் இணையதளத்தில் இன்று (மே 29) டிரெண்டிங்கில் உள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 2023ஆம் ஆண்டு தொடங்கிய போர் தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த போரின் விளைவாக காசாவில் மட்டும் 35 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து, ஹமாசை அடியோடு அழிக்கும் வரை போர் நிறுத்தம் என்பது இல்லை என்று தெரிவித்த இஸ்ரேல், காசா மீது தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இஸ்ரேலின் இந்த செயலுக்கு சர்வதேச நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால், எதிர்ப்பையும் மீறி காசாவின் ரபா என்ற நகர் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் ரபா நகரில் தான் தஞ்சம் அடைந்துள்ளனர். எனவே அங்கு தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் தொடர்ந்து இஸ்ரேலிடம் வலியுறுத்தி வருகிறது.
ஆனால், இஸ்ரேல் இதை பொருட்படுத்தாமல், ரபா நகர் மீதான தாக்குதலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் (மே 27) இரவில் ரபா நகர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 16 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நேற்று (மே 28) காலையும் இஸ்ரேல், ரபா மீது வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலால் இதுவரை குழந்தைகள் உட்பட 37 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள திரைப்பிரபலங்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பலரும் தங்களது வலைதள பக்கங்களில் “ஆல் ஐஸ் ஆன் ரபா” என பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திரைப்பிரபலங்களான திரிஷா, சமந்தா, துல்கர் சல்மான், அட்லீ, ஹன்சிகா, மாதுரி தீக்ஷித், சோனம் கபூர், இலியானா, ரகுல் ப்ரீத் சிங், மலைக்கா அரோரா, நோரா ஃபதாஹி என பலரும் “ஆல் ஐஸ் ஆன் ரபா” என பதிவிட்டு வருகின்றனர்.
இவர்களை தொடர்ந்து, விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பிரபலங்கள் என 3 கோடிக்கும் அதிகமானவர்கள் கடந்த 24 மணிநேரத்தில் “ஆல் ஐஸ் ஆன் ரபா” என்ற போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதிய இந்தியா பிறக்க வேண்டிக் கொள்கிறேன் : இமயமலை செல்வதற்கு முன் ரஜினி பேட்டி!