இந்தியா வெற்றி பெற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் மோடி, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸிடம் இன்று (மார்ச் 29) தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று விவாதித்தனர்.
பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது 2023ல் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டைப் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, “ஜி20 மாநாட்டிற்கு முன்பு நாங்கள் விரிவான விவாதங்களை நடத்தினோம், நீங்கள் பார்த்திருப்பீர்கள், உச்சிமாநாட்டின் நடவடிக்கைகள் பல திருப்பங்களை கொடுத்துள்ளன” என்றார்.
இதற்கு பதிலளித்த பில்கேட்ஸ், “ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தியதை பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. இந்தியா இதனை எடுத்து நடத்தியது எங்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இந்த மாநாட்டின் மூலம் பல விஷயங்கள் நடந்துள்ளன. அதனை வேறு பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் நாங்கள் ஒரு முக்கிய பங்களிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சி குறித்து பேசிய பிரதமர் மோடி, “இந்தோனேசியாவில் நடந்த ஜி20 மாநாட்டின் போது, உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகள் டிஜிட்டல் புரட்சி குறித்து தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். மக்களுக்காக கொண்டு வரப்பட்டது தான் டிஜிட்டல் தொழில்நுட்பம்” என்றார்.
இதற்கு பில் கேட்ஸ், “ இந்தியாவில் “டிஜிட்டல் அரசாங்கம்” உள்ளது. இந்தியா தொழில்நுட்பத்தை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல், அது உண்மையில் முன்னணியில் உள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து 2023 G20 உச்சிமாநாட்டின் போது AI எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதையும் பிரதமர் மோடி பில்கேட்ஸிடம் விளக்கினார்.
பிரதமர் மோடி, ” உலக அளவில் இந்தியா வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். இதில் AI பங்கு மிக முக்கியமானது. காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் போது AI பயன்படுத்தி தனது இந்தி பேச்சு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது, பிரதமர் மோடி தூத்துக்குடி முத்துக்கள் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட தமிழ்நாட்டு குதிரை பொம்மைகளை பில்கேட்ஸ்-க்கு பரிசளித்தார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Aadujeevitham: பிரித்விராஜ் இப்படி எல்லாம் செஞ்சாரா?
சென்னை மதுபான விடுதி விபத்து: மேலாளர் கைது!