காற்று மாசு எதிரொலியாக டெல்லியில் இன்று (நவம்பர் 15) முதல் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் 3 (GRAP 3) செயல்படுத்தப்படும் என காற்றின் தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் பொதுவாக அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசு அதிகரிப்பது வழக்கமாக உள்ளது. கடந்த அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று தரம் மிக மோசமான நிலையில் உள்ளது.
இதன் காரணமாக முதியவர்களும், குழந்தைகளும் பொதுமக்கள் சுவாச பிரச்னை, கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் சராசரி காற்று தரக் குறியீடு (AQI) 441 ஆக பதிவாகியுள்ளது.
காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இன்று காலை அடர்ந்த மூடுபனி நிலவியது. டெல்லி விமான நிலையத்தில் ஓடுபாதையில் பார்வைத்திறன் பூஜ்ஜியமாக குறைந்ததால், சில விமானங்கள் தரையிறங்காமல் திருப்பி விடப்பட்டன.
இன்று முதல் GRAP 3 அமல்!
இந்த நிலையில், அதிகரித்து வரும் காற்று மாசு எதிரொலியாக தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் 3 (GRAP 3) இன்று முதல் (நவம்பர் 15) செயல்படுத்தப்படும் என காற்றின் தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
காற்றின் தரம் கடுமை நிலையை (401 முதல் 450 வரை) அடையும் போது செயல்படுத்தப்படும் மாசு எதிர்ப்பு நடவடிக்கை ஆகும்.
இந்த திட்டத்தின் படி டெல்லியில் கட்டுமான பணிகள் மற்றும் கட்டிட இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சில பொது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு.
அதே போல் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளான குருகிராம், பரிதாபாத், காசியாபாத், நொய்டாவில் பிஎஸ் 3 பெட்ரோல், பிஎஸ் 4 டீசல் நான்கு சக்கர வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டது.
கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் இயக்கத்திற்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். வெளியே செல்வது அவசியமானால், என்95 முககவசம் அணிய அறிவுத்தப்பட்டுள்ளது.
5ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு!
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு அளவைக் கருத்தில் கொண்டு, எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த வேண்டும் என்று முதல்வர் அதிஷி தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கவனம் பெறும் பிரியங்கா காந்தி ட்விட்!
வயநாடு மக்களவை இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் டெல்லி சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காற்று மாசுபாடு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “காற்று தரம் 35 ஆக உள்ள வயநாட்டில் இருந்து டெல்லிக்கு திரும்பி வருவது எரிவாயு அறைக்குள் நுழைவது போல் இருந்தது. வானில் இருந்து பார்க்கும் போது தென்படும் புகை மூட்டம் இன்னும் அதிர்ச்சி அளிக்கிறது. டெல்லியின் மாசு ஒவ்வொரு ஆண்டும் மோசமாகிக் கொண்டே வருகிறது.
குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சுவாசிப்பது தற்போது சாத்தியமற்றதாக உள்ளது. நம் தலைமுறைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து சுத்தமான காற்றுக்கான தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்” என்று பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Asian Champions Trophy : தாய்லாந்தை ஊதித் தள்ளிய இந்திய மகளிர் ஹாக்கி அணி!
ஹெல்த் டிப்ஸ்: மாரடைப்பு சார்ந்த மரணங்கள் குளிர்காலங்களில் அதிகமாவது ஏன்?