கடந்த நவம்பர் மாதம் நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பெண் பயணி மீது ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம் இன்னும் விரைவான முறையில் பதிலளித்திருக்க வேண்டும் என்று டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 26-ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஷங்கர் மிஸ்ரா என்ற நபரை டெல்லி தனிப்படை போலீசார் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியுள்ள டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2022-ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானம் ஏஐ 102 இல் நடந்த சம்பவம் எனக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள எனது சக ஊழியர்களுக்கும் தனிப்பட்ட முறையில் வேதனையை அளித்துள்ளது.
ஏர் இந்தியாவின் பதில் மிக வேகமாக இருந்திருக்க வேண்டும். டாடா குழுமம் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு முழு நம்பிக்கையுடன் துணை நிற்கின்றன.
இதுபோன்ற சம்பவங்கள் இனி ஏற்படாத வகையில் எங்களுடைய செயல்முறைகளை நாங்கள் மதிப்பாய்வு செய்து சரிசெய்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரி 7-ஆம் தேதி ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு கேபின் பணியாளர்கள் மற்றும் ஒரு பைலட் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை சிறப்பாக கையாண்டதாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
மும்பை இந்தியன்ஸ் எனது குடும்பம்: ரோகித் ஷர்மா நெகிழ்ச்சி!
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!