இமாச்சல பிரதேசத்தில் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 5) திறந்து வைத்தார்.
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
அதன் முதல் நிகழ்ச்சியாக பிலாஸ்பூர் சென்ற பிரதமர் மோடி, சுமார் 1,470 கோடி ரூபாய் செலவில் அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவருடன் இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் – சிறப்பு வசதிகள்!
18 சிறப்பு மற்றும் 17 தனிசிறப்பு பிரிவுகள், 64 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் மொத்தம் 750 படுக்கைகள் மற்றும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய அறுவை சிகிச்சை அரங்குகளுடன்
247 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் 24 மணிநேர அவசர மற்றும் டயாலிசிஸ் வசதிகள், அல்ட்ராசோனோகிராபி, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ போன்ற நவீன நோயறிதல் இயந்திரங்கள் ஆகியவை உள்ளன.
மேலும் ஆயுர்வேத சிகிச்சைக்காக 30 படுக்கைகள் கொண்ட தனி மருத்துவப் பிரிவும் கட்டப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் மருத்துவமனையை அணுக முடியாத பழங்குடியினருக்கு சுகாதார சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் சுகாதார மையமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், காசா, சலுனி மற்றும் கீலாங் போன்ற அணுக முடியாத பழங்குடி மற்றும் உயர் இமயமலைப் பகுதிகளில் சுகாதார முகாம்கள் மூலம் சிறப்பு சுகாதார சேவைகள் மருத்துவமனையால் வழங்கப்படும்.
இந்த மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ் படிப்புக்கு 100 மாணவர்களும், நர்சிங் படிப்புக்கு 60 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள்.
கிறிஸ்டோபர் ஜெமா
95% முடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ் : பொட்டல்காடாக மதுரை எய்ம்ஸ்!