தேர்தல் ஆணையத்திடம் பதிவுசெய்து, அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நாடுமுழுவதும் வருமானவரித் துறையினர் இன்று (செப்டம்பர் 7) ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் என இரண்டு வகைப்படும்.
இதில் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஜூன் 20ம் தேதி ரத்து செய்தது.
அந்த அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மதிக்காமல் இருத்தல், தேர்தல் சட்டங்களை மீறுதல், நிதி மூலம், வருமான கணக்கைத் தாக்கல் செய்யாமல் இருத்தல், கட்சிகளின் முகவரி, அலுவலக பொறுப்பாளர்கள் ஆகியவற்றை புதுப்பிக்காமல் இருத்தல் ஆகிய காரணங்களுக்காக அக்கட்சிகள் நீக்கப்பட்டன.
அதிலும் சில அரசியல் கட்சிகள் தீவிரமான நிதி மோசடிகளிலும், சட்டவிரோதப் பணத்தை அரசியல் கட்சி நடத்தவும் பயன்படுத்துவது தெரியவந்து, அதன் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருந்தது.
இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 7) அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது, அவர்களின் வருமான மூலம் என்ன, யார் இயக்குவது, பண உதவி யார் செய்கிறார்கள், வரி ஏய்ப்பு ஆகியவை குறித்து வருமானவரித்துறையினர் 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ரெய்டு குஜராத், டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் சில மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் லக்னோவில் உள்ள ராஷ்ட்ரிய கிராந்திகாரி சமாஜ்வாதி கட்சியின் கோபால் ராய் வீடும் சோதனை செய்யப்பட்டது.
கோபால் ராய் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நடத்தி வந்திருப்பதும், அதன்மூலம் வரி ஏய்ப்பு நடத்தியது குறித்தும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சோதனை குறித்து வருமானவரிச் சோதனை அதிகாரிகள், “அரசியல் கட்சிகள், உரிய விதிகளை பின்பற்றாமல், நன்கொடையை பெற்றுக்கொண்டு வரி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதைக் கண்டுபிடிக்கவே இந்தச் சோதனை” என தெரிவித்துள்ளனர்.
ஜெ.பிரகாஷ்
87 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து: தேர்தல் கமிஷன் நடவடிக்கை