மணிப்பூரில் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட இணையசேவை 2 நாட்களில் மீண்டும் இன்று(செப்டம்பர் 26) முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் முதல் பாஜக ஆளும் மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்தி மற்றும் சிறுபான்மையான குக்கி இன மக்களிடையே மோதல் வெடித்தது.
பின்னர் ஏற்பட்ட கலவரத்தில் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் அமைதி நிலை திரும்பியுள்ளதாக அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங் அறிவித்தார். மேலும் மாநிலத்தில் இணைய சேவைகள் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என்று கடந்த வாரம் கூறியிருந்தார்.
அதன்படி கடந்த சனிக்கிழமையன்று மணிபூரில் மொபைல் இணைய சேவை திரும்ப பெறப்பட்டது.
இந்த நிலையில், கலவரத்தில் சிக்கி கடந்த ஜூலை மாதம் கொடூரமாக கொல்லப்பட்ட இரண்டு மெய்தி இளைஞர்களின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டன.
இது இரு சமூகத்தினரிடையே மீண்டும் பெரும் சீற்றத்தை கொண்டு வந்த நிலையில், மணிப்பூர் அரசாங்கம் மாநிலத்தில் இணைய சேவைகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று அரசு வெளியிட்ட உத்தரவு அறிக்கையில், “மணிப்பூரில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகத் தளங்கள் மூலம் தவறான தகவல், வதந்திகள் மற்றும் பிற வகையான வன்முறைச் செயல்பாடுகள் பரவுவதை மாநில அரசு மிகுந்த உணர்வுடன் மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீரழிவைக் கருத்தில் கொண்டு மணிப்பூரில் இணைய சேவைகள் வரும் அக்டோபர் 1ஆம் தேதி இரவு 7:45 மணி வரை ஐந்து நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது” என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இணையத்தில் வைரலான புகைப்படங்கள் இருந்தவர்கள் மெய்தி இனத்தைச் சேர்ந்த 17 வயதான ஹிஜாம் லிந்தோய்ங்கம்பி மற்றும் 20 வயதான பிஜாம் ஹெம்ஜித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்து விரைவான நடவடிக்கை எடுப்பதாகவும் மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பாஜக அலுவலக ஊழியரின் வீட்டில் சோதனை நிறைவு!
ரெண்டாயிரத்துக்கு வந்த எண்டு….: அப்டேட் குமாரு!
புதிய தலைமைச் செயலக வழக்கு : லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு!